மஹிந்தானந்த ஆதாரங்களை வௌிப்படுத்த வேண்டும் அல்லது மன்னிப்புக் கோர வேண்டும்: அர்ஜூன ரணதுங்க

மஹிந்தானந்த ஆதாரங்களை வௌிப்படுத்த வேண்டும் அல்லது மன்னிப்புக் கோர வேண்டும்: அர்ஜூன ரணதுங்க

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2020 | 9:35 pm

Colombo (News 1st) ஆட்ட நிர்ணய அறிவிப்பு தொடர்பான தமது நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.

எனினும், குறித்த கருத்துடன் தொடர்புடைய விடயங்களை அளுத்கமகே நாட்டு மக்களுக்கு வௌிப்படுத்த வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே வௌியிட்ட கருத்து தொடர்பில் ஏற்பட்ட புரளி இன்னும் முடிவிற்கு வரவில்லை.

ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் மோசடி ஒழிப்புப் பிரிவு பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் நேற்று அறிவித்தார்.

விளையாட்டுகளுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவு குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை நேற்று இறுதி செய்தது.

ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக எந்தவொரு விடயமும் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு தெரிவித்தது.

இவ்வாறான பின்புலத்தில் மஹிந்தானந்த அளுத்கமகே நாவலப்பிட்டியில் நேற்றிரவு மீண்டும் கருத்து வௌியிட்டார்.

இதன் பாரதூரத் தன்மை காரணமாக நான் வாக்குமூலம் அளித்தேன். எனினும், இதனை சர்வதேச கிரிக்கெட் பேரவையே விசாரணை செய்ய வேண்டும். அது தொடர்பாக நான் அவர்களுக்கு தகவல்களை வழங்கியுள்ளேன். அநீதியான, கீழ்மட்ட அறிவிப்பை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ளார். இது தொடர்பில் முழுமையாக விசாரணை நடத்துமாறு நான் ஜனாதிபதியிடம் கோரியிருக்கிறேன். எனது நிலைப்பாட்டில் நான் இருக்கிறேன். நாளையும் அவ்வாறே இருப்பேன். அதில் எந்த மாற்றமும் இல்லை

என அவர் கூறினார்.

இதேவேளை, இது தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜூன ரணதுங்க பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்

அவ்வாறு குற்றச்சாட்டுகள் இருந்தால் நிரூபித்துக் காட்ட வேண்டும். அப்போது தான் விசாரணை நடத்த முடியும் என்பதை நான் பகிரங்கமாகவே கூறினேன். கட்டாயமாக விசாரணை நடத்துங்கள். வீரர்களுக்கு தொடர்பில்லை என்றே அவர் கூறினார். ஆனால், விசாரணைகளுக்கு முதலாவதாக வீரர்களையே அழைத்தனர். மூன்று நாட்களுக்குள் இந்த விசாரணைகளை முடித்து வீரர்களை விடுவித்துள்ளனர். மஹிந்தானந்த அளுத்கமகே தம்மிடம் இருக்கும் ஆதாரங்களை இந்த நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தவறுதலாக அப்படி ஒன்றைக் கூறிவிட்டேன், மன்னித்துக்கொள்ளுங்கள் என்று அவர் தெரிவிக்க வேண்டும்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்