ஜிந்துபிட்டியை சேர்ந்த 154 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

by Staff Writer 03-07-2020 | 3:12 PM
Colombo (News 1st) கொழும்பு - 13, ஜிந்துபிட்டி பகுதியை சேர்ந்த 154 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஜிந்துபிட்டி பகுதியில் கொரோனா நோயாளர் ஒருவர் நேற்று அடையாளம் காணப்பட்டமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையின் கடற்பாதுகாப்பு உத்தியோகத்தருக்கே நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாடு திரும்பியதன் பின்னர் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு இவர் உட்படுத்தப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவரது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் நேற்று மாலை அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். கொரோனா தொற்றுக்குள்ளான நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜிந்துபிட்டி பகுதியில் இவருடன் பழகிய 28 குடும்பங்களை சேர்ந்த 154 பேர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறினார். எவ்வாறாயினும், ஜிந்துப்பிட்டியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர், சமூகத் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட நோயாளி அல்லவென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். அவர் தனிமைப்படுத்தல் செயற்பாட்டின் போது அடையாளம் காணப்பட்ட நோயாளர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். இதேவேளை, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 2,066 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோயாளர்கள் மேலும் 36 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதற்கமைய, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1, 863 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நேற்று 12 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 192 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.