தலைவர் சுடச் சொன்னவர்களை சுடாமல் விட்டது தான் நாங்கள் செய்த தவறு: கருணா தெரிவிப்பு

தலைவர் சுடச் சொன்னவர்களை சுடாமல் விட்டது தான் நாங்கள் செய்த தவறு: கருணா தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

03 Jul, 2020 | 5:56 pm

Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு தாமே காரணம் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.

கூட்டமைப்பின் தலைவர்களை புலிகள் இயக்கத்தின் தலைவரிடம் தாமே அழைத்துச் சென்றதாகவும் குறித்த தலைவர்கள் தங்களால் சுட்டுக்கொல்லத் தயாரானவர்களின் பட்டியலில் இருந்தவர்கள் எனவும் கருணா அம்மான் கூறினார்.

மேலும், தலைவர் சுட்டுக் கொல்லும் படி கூறியவர்களை அவ்வாறு செய்யாமல் விட்டது தான் தாம் செய்த தவறு எனவும் தெரிவித்தார்.

அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தொடர்பிலும் கருணா அம்மான் விமர்சனங்களை முன்வைத்தார்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் நேற்று முன்தினம் (01) இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களைக் கூறினார்.

 

இதேவேளை, கருணா அம்மானை கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடுவெல நகர சபை உறுப்பினர் போசெத் கலஹேபத்திரன இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

யுத்த காலப்பகுதியில் ஆனையிறவில் ஓரிரவில் 2000 இராணுவ வீரர்களைக் கொலை செய்வதற்கு தலைமைத்துவம் வழங்கிய தாம், COVID-19 தொற்றை விடவும் அபாயகரமானவர் என அம்பாறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கருணா அம்மான் தெரிவித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை செப்டம்பர் 28 ஆம் திகதி மீள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்