ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லை: விசாரணை நிறுத்தம்

ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லை: விசாரணை நிறுத்தம்

ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லை: விசாரணை நிறுத்தம்

எழுத்தாளர் Bella Dalima

03 Jul, 2020 | 3:47 pm

Colombo (News 1st) 2011 உலகக் கிண்ண கிரிக்கெட் ​தொடரின் இறுதிப் போட்டியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆட்ட நிர்ணயம் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாக விளையாட்டுக் குற்றங்களைத் தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இன்மையினால் விசாரணைகள் நிறுத்தப்படுவதாக இந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

2011 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் தெரிவுக்குழு தலைவராக செயற்பட்ட அரவிந்த டி சில்வா , கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க மற்றும் டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர் குமார சங்கக்கார ஆகியோரிடம் விசேட விசாரணைப் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

இதேவேளை, மஹேல ஜயவர்தனவிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த போதும், வேறு விடயங்களுக்காக விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக விளையாட்டுக் குற்றங்களைத் தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவு தெரிவித்தது.

இந்நிலையில், ஆட்ட நிர்ணயம் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்வதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அறிக்கை ஒன்றினூடாக விளையாட்டுக் குற்றங்களைக் தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக, பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்