ருவன்புர அதிவேக வீதி பணிகள் குறித்த தீர்மானம்

ருவன்புர அதிவேக வீதி நிர்மாண பணிகளை உள்நாட்டு நிறுவனங்களிடம் கையளிக்க அமைச்சரவை அங்கீகாரம்

by Staff Writer 02-07-2020 | 1:33 PM
Colombo (News 1st) நாட்டிற்கு பாதகமான எந்தவொரு உடன்படிக்கையிலும் கைச்சாத்திட போவதில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (02) முற்பகல் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். புத்திஜீவிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும் குழுவின் இறுதி அறிக்கை நேற்று அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் இந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்து, அனைத்து அமைச்சரவை அமைச்சர்களின் கருத்துகளை அமைச்சரவையிடம் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்ததாகவும் அவர் கூறினார். இதனடிப்படையில், ஒவ்வொரு அமைச்சரும் இது குறித்து தமது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த விடயம் குறித்து தனது கருத்துகள் மற்றும் ஏனைய அமைச்சரவை அமைச்சர்களின் கருத்துகளும் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். நேற்றைய தினமே இந்த அறிக்கை கிடைத்ததால் இதுவரை அதனை பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் இடைக்கால அறிக்கைகைய மாத்திரமே தம்மால் ஆராய முடிந்ததாகவும் தெரிவித்தார். எக்காரணத்திற்காகவும் எந்தவொரு நாட்டுடனும் அரசியலமைப்பை மீறும் வகையில், நாட்டின் சட்ட திட்டங்களை மீறும் வகையிலும் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் எந்தவொரு உடன்படிக்கையிலும் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடாது எனக் கூறிய அமைச்சர் பந்துல குணவர்தன, தமது ஆட்சி காலத்தில் நாட்டிற்கு குந்தகம் ஏற்படும் வகையில் எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார். இதேவேளை, கொழும்பு - இரத்தினபுரி அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை உள்நாட்டு ஒப்பந்த நிறுவனங்களூடாக முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கஹதுடுவ, இங்கிரிய, இரத்தினபுரி, பெல்மடுல்ல வரையான ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை தொடர்பில், அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் இந்த அதிவேக நெடுஞ்சாலை குறித்து யோசனை முன்வைக்கப்பட்டது. கடந்த அரசாங்க காலத்தில், இதன் நிர்மாண பணிகளை வௌிநாட்டு நிறுவனங்ளுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் கடந்த அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் இரத்து செய்வதற்கு நேற்று அமைச்சரவை தீர்மானித்தது. வௌிநாட்டு ஒத்துழைப்பின்றி தேசிய நிதியை பயன்படுத்தி உள்நாட்டு நிறுவனங்களால் வீதி நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன
என அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது மேலும் குறிப்பிட்டார்.