கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க வேண்டாம்: ஊழியர்களின் எதிர்ப்பு வலுப்பெற்றது

by Staff Writer 02-07-2020 | 9:16 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய செயற்பாடுகள் துறைமுக அதிகார சபையின் மூலம் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஊழியர்கள் சிலர் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை இன்று பிற்பகல் அளவில் பகிஷ்கரிப்பாக தீவிரமடைந்தது. தம்மை சந்தித்து பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துமாறு பிரதமர் இன்று பிற்பகல் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கும் முயற்சியுள்ளதாக துறைமுக ஒன்றிணைந்த தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டுகின்றது. இந்த முயற்சியின் காரணமாக கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ள மூன்று பாரந்தூக்கிகளை கிழக்கு முனையத்தில் இறக்குவதற்கு தடையேற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனினும், கடந்த அரசாங்கக் காலத்தில் முன்பதிவு செய்யப்பட்ட இந்தப் பாரந்தூக்கிகளை துறைமுக அதிகார சபை வசமுள்ள ஒரு பகுதியின் நிர்மாணிக்கப்படாத முனையமொன்றில் பொருத்துவதற்கு கோரப்பட்டுள்ளதாக துறைமுக நிர்வாக சபை தெரிவித்தது. எவ்வாறாயினும், இது தொடர்பாக கடும் நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கும் தொழிற்சங்க உறுப்பினர்கள் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பாரந்தூக்கியில் ஏறி நேற்று தமது எதிர்ப்பை வௌியிடடனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி மற்றொரு தரப்பினர் நேற்றிரவு துறைமுகத்தில் தங்கியிருந்தனர். காலி துறைமுக ஊழியர்களும் இந்த எதிர்ப்பிற்கு இன்று ஒத்துழைப்பு தெரிவித்தனர். பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று அமைச்சுக்கு சென்றார். இதன்போது சாதகமான பதிலொன்று கிடைக்கவில்லை என தொழிற்சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தையின் அடிப்படை விடயங்கள் தொடர்பாக ஏனைய ஊழியர்களை தௌிவுபடுத்தி பதிலளிக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார். பதில் கிடைக்கும் வரை அமைச்சில் காத்திருந்த அமைச்சர் பின்னர் அங்கிருந்து வௌியேறினார்.