எஞ்சிய காடுகளையும் இழக்க நேரிடுமா: சுற்றுநிரூபமொன்றை இரத்து செய்யுமாறு அமைச்சரவையில் யோசனை

by Staff Writer 02-07-2020 | 9:03 PM
Colombo (News 1st) MCC நிறுவனத்தினால் இலங்கைக்கு வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 480 மில்லியன் டொலரின் ஒரு பகுதியை காணி மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு ஒதுக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது MCC தொடர்பில் விவாத நிலைமை ஏற்பட்டிருக்கையில், நாட்டின் பெறுமதியான காணிகள் தொடர்பில் வேறு தீர்மானம் எடுப்பதற்கான ஆயத்தம் இடம்பெறுகின்றது. இந்த அபாய நிலைமை தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் கடந்த சில தினங்களாக சுட்டிக்காட்டியிருந்தது. அரசாங்கத்தின் எஞ்சிய காடு என்று கருதப்படும் காணிகள் பல்வேறு தரப்பினருக்கு எண்ணப்படி வழங்கப்படுவதை வரையறுத்து 2001 ஆம் ஆண்டு வௌியிடப்பட்ட சுற்றுநிரூபத்தை இரத்து செய்வது அந்த முயற்சியாகும். இந்த சுற்றுநிரூபம் காரணமாக, அவ்வாறான காணிகளை வழங்கும்போது விசேட மீள்வாய்வுக் குழுவின் அனுமதியைப் பெற வேண்டும். சுற்றுநிரூபத்தை இரத்து செய்தால், மாவட்ட செயலாளர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் அதிகாரம் வழங்கப்படும். கடந்த 29 ஆம் திகதி பாஹியங்கல ஆனந்த சாகல தேரர், காணி அமைச்சின் செயலாளரை சந்தித்து இந்த அபாய நிலை குறித்து தௌிவுபடுத்தினார். எனினும், இது தொடர்பில் தீர்மானிக்கும் பொறுப்பு அமைச்சரவையின் வசமுள்ளது. சட்டத்தின் கீழ் பாதுகாப்பு பிரதேசமாக இதுவரை பெயரிடப்படாத பிரதேசம் எஞ்சிய காடு என கருதப்படுகின்றது. இரத்தினபுரி மாவட்டத்தின் கிலிமலே எரந்த, கிரிபத்கல, களுத்துறை மாவட்டத்தின் மொரபிட்டிய, ருஹூனு கந்த , கெலின்கந்த ஆகிய பிரதேசங்கள் அரசாங்கத்தின் எஞ்சிய காடுகளின் சிலவாகும்.