ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு: சங்கக்காரவிடம் 9 மணித்தியாலங்களுக்கு மேல் வாக்குமூலம் பதிவு

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு: சங்கக்காரவிடம் 9 மணித்தியாலங்களுக்கு மேல் வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2020 | 9:41 pm

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இன்று விசேட விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

இன்று காலை 9 மணிக்கு விசாரணைப் பிரிவில் முன்னிலையான குமார் சங்கக்காரவிடம் 9 மணித்தியாலங்களுக்கு மேல் வாக்குமூலம் பெறப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு குமார் சங்கக்கார தலைமை தாங்கியிருந்தார்.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஷஷாங்க் மனோகர் இராஜினாமா செய்துள்ளார்.

இதற்கமைய, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உப தலைவர் இம்ரான் கவாஜா பதில் தலைவராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய தலைவர் தெரிவு நடைமுறை அடுத்த வாரம் சர்வதேச கிரிக்கெட் பேரவையால் அறிவிக்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவேளை, தாய் நாட்டிற்கு நற்பெயரையும் வெற்றியையும் பெற்றுக்கொடுத்த குமார் சங்கக்கார உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் சதி தோற்கடிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்