வடக்கு தெற்கு எனும் பாகுபாடு அரசாங்கத்திற்கு இல்லை

வடக்கு, தெற்கு எனும் பாகுபாடு எமது அரசாங்கத்திற்கு இல்லை: பிரதமர் தெரிவிப்பு

by Bella Dalima 01-07-2020 | 5:20 PM
Colombo (News 1st) நாட்டின் அபிவிருத்தியில் வடக்கு, தெற்கு எனும் பாகுபாடு தமது அரசாங்கத்திற்கு இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார். வடக்கு மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டியது ஊடகவியலாளர்களின் பொறுப்பு எனவும் பிரதமர் கூறினார். தமிழ் ஊடகவியலாளர்களை இன்று சந்தித்த போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். அலரி மாளிகையில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, மீன்வள மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். 2005 முதல் 2010 ஆம் ஆண்டுகளில் தமது அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது, வடக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டதாகக் கூறிய பிரதமர், வட மாகாண மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் திட்டங்களுடன் செயற்பட்டதாகவும் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களுக்காக எந்தவொரு வளர்ச்சித் திட்டங்களையும் செயற்படுத்தவில்லை எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கூறினார். வடக்கு மக்களுக்காக முன்னிற்பதாகக் கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அந்த மக்களின் உண்மையான பிரச்சினைக்கு பதிலாக, அரசியல் இலாபம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் மாத்திரமே செயற்பட்டதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார். வட மாகாண மக்கள் பிரதானமாக எதிர்நோக்கியுள்ள குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்க தமது அரசாங்கம் முதலிடம் கொடுப்பதாகவும் அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மேலும் தெரிவித்தார்.