கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு விற்க வேண்டாம்: துறைமுக ஊழியர்கள் உண்ணாவிரதம்

by Bella Dalima 01-07-2020 | 4:19 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் மூவர் பளு தூக்கி மேல் ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். கொழும்பு துறைமுகத்தின், கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்காமல் துறைமுக அதிகார சபையின் கீழ் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பது அவர்களின் அடிப்படைக் கோரிக்கையாகும். துறைமுக தொழிற்சங்க ஒன்றியத்தின் மூன்று பிரதிநிதிகள் இன்று முற்பகல் 9 மணியளவில் துறைமுகத்தின் பளு தூக்கியின் மீது ஏறினர். அண்மையில் சீனாவில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட மூன்று பளு தூக்கிகளில் ஒன்றின் மீது ஏறியே இவர்கள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர். இதன் நிர்மாணப் பணிகளில் பெரும் பகுதியை துறைமுக அதிகார சபை நிறைவு செய்துள்ளது. இந்த பெறுமதியான சொத்தை இந்தியாவின் நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கான ஆயத்தம் தொடர்பில், விவாத நிலைமை ஏற்பட்டுள்ள போது, கடந்த அரசாங்கக் காலத்தில் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மூன்று பளு தூக்கிகள் கொழும்பு துறைமுகத்தை வந்ததடைந்தன. இந்த பளு தூக்கிகளை கிழக்கு முனையத்தில் பொருத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில், கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் போது இந்திய பிரதமருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இதுவென அவர் சுட்டிக்காட்டினார்.