ஊவா ப்ரீமியர் லீக் எனும் மர்மத் தொடர்

ஊவா ப்ரீமியர் லீக் எனும் மர்மத் தொடர்

ஊவா ப்ரீமியர் லீக் எனும் மர்மத் தொடர்

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2020 | 9:25 pm

Colombo (News 1st) ஊவா ப்ரீமியர் லீக் T20 எனும் பெயரில் நடத்தப்படும் மர்மத் தொடர் குறித்து இந்நாட்களில் பலவாறாகப் பேசப்படுகின்றது.

4 அணிகளின் பங்களிப்பில் ஊவா ப்ரீமியர் லீக் எனும் பெயரில் கிரிக்கெட் தொடரொன்று நடத்தப்படுவதாக சமூக ஊடகங்களும் இந்திய இணையத்தளங்கள் சிலவும் தகவல் வெளியிட்டுள்ளன.

அந்த அணிகளின் தலைவர்களாக முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எம். டில்ஷான், அஜந்த மென்டிஸ், பர்வீஸ் மஹ்ருப் மற்றும் திலான் துஷார ஆகியோர் செயற்படுவதாக அந்தத் தகவல்களில் கூறப்பட்டுள்ளது.

எனினும், அந்த வீரர்களிடம் இது குறித்து வினவியபோது, அது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என பதிலளித்தனர்.

இந்திய இணையத்தளங்கள் சில நேரடியாக ஸ்கோர் விபரங்களை வெளியிட்டுள்ள போதிலும் அது போன்றதொரு தொடர் இலங்கையில் நடைபெறவில்லை என்பது ஆராய்ந்த போது உறுதியானது.

COVID-19 தொற்று அபாயம் காரணமாக எந்தவொரு தொடரும் உலகம் பூராகவும் நடத்தப்படாதிருக்கும் இந்தத் தருணத்தில் இந்தியா உட்பட ஏனைய நாடுகளின் சூதாட்ட முகவர்கள் ஆட்ட நிர்ணயத்திற்கு திட்டமிடும் சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றனவா எனும் சந்தேகம் எழுகின்றது.

இதேவேளை, PDC T10 லீக் எனும் பெயரில் கிரிக்கெட் தொடரொன்று இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்பில் இலங்கையில் நடைபெறுவதாக வெளியாகும் தகவல்கள் பொய்யானவை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளின் போது சூதாட்டப் பந்தய முகவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களிடம் இலங்கை கிரிக்கெட் ஊழல் ஒழிப்பு பிரிவு வாக்குமூலம் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தமை தொடர்பாக இதற்கு முன்னர் நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டியிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்