MCC: ஒதுக்கப்பட்ட 32 மில்லியன் டொலர் நிதி எங்கே?

MCC: ஒதுக்கப்பட்ட 32 மில்லியன் டொலர் நிதி எங்கே என உதய கம்மன்பில கேள்வி

by Staff Writer 30-06-2020 | 8:28 PM
Colombo (News 1st) நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களின் சுதந்திரத்திற்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினை என்பதால் தொடர்ந்தும் MCC உடன்படிக்கை தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வௌிக்கொணர்ந்து வருகிறது. அதனைப் போன்று மத்திய வங்கி மோசடி , ஶ்ரீலங்கன் விமான நிறுவன கொடுக்கல் வாங்கல், நிதி நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடி, பாரியளவிலான மோசடித் திட்டங்கள் போன்றன தொடர்பிலும் நியூஸ்ஃபெஸ்ட் வௌிக்கொணர்ந்துள்ளது. உயர் மட்டத்தில் உள்ளவர்கள் எடுக்கும் இவ்வாறான தீர்மானங்களினால் இறுதியில் கீழ் மட்டத்திலுள்ள மக்களே பாதிக்கப்படுகின்றனர். MCC மீளாய்வுக் குழுவின் அறிக்கையின் பிரகாரம், கடந்த அரசாங்கம் இரண்டு சந்தர்ப்பங்களில் 10 மில்லியன் டொலர் நிதியைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி இந்த குற்றச்சாட்டை நேற்று நிராகரித்துள்ள நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில காலப்பகுதியையும் குறிப்பிட்டு அது தொடர்பான விடயங்களை இன்று வௌிக்கொணர்ந்தார்.
2017 ஜூலை மாதம் 27 ஆம் திகதி MCC உடன்படிக்கை தொடர்பில் இலங்கைக்கு 7.4 பில்லியன் டொலரை வழங்குவதற்கான சந்திப்பில், MCC நிறுவனத்தின் வலயத்திற்கு பொறுப்பான பிரதி உப தலைவர் பாத்திமா சுமர் இருப்பது இந்த புகைப்படத்தின் மூலம் விளங்குகின்றது. அந்த காலப்பகுதியில் எமது திறைசேரியின் செயலாளராக R.H.S.சமரதுங்க செயற்பட்டார். அவ்வாறு எனின், இந்த உடன்படிக்கையை கைச்சாத்திடவில்லையா? MCC நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கரோலின் நுகே மற்றும் எமது திறைசேரியின் செயலாளர் R.H.S.சமரதுங்க ஆகியோர் 2.4 மில்லியன் டொலரை MCC-க்காக வழங்குவதற்காக, 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் திகதி உடன்படிக்கையை கைச்சாத்திட்டுள்ளனர். திறைசேரி அந்த நிதியை வழங்கவில்லையா என நாம் ​கேட்கின்றோம். அவ்வாறு நிதியை வழங்காவிடின், எதற்காக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. MCC உடன்படிக்கைக்கு அமைய, நிர்வாகம் மற்றும் கண்காணிப்பு செயற்பாடுகளுக்கு 32 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படியாயின், அந்த நிதி எங்கே?
என உதய கம்மன்பில கேள்வி எழுப்பினார்.