அரந்தலாவை பிக்கு படுகொலை தொடர்பில் மனு தாக்கல்

அரந்தலாவை பிக்கு படுகொலை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

by Staff Writer 30-06-2020 | 9:23 PM
Colombo (News 1st) அரந்தலாவை பிக்குகள் கொலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரந்தலாவை தாக்குதலில் காயமடைந்த ஆந்தாஉல்பத்த புத்தசார தேரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களில் தற்போது உயிருடன் உள்ளவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோருக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. தாக்குதலில் பலத்த காயங்களுக்குள்ளான தமக்கு 20 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடுமாறும் மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மனுவில் பிரதிவாதிகளாக பதில் பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இதேவேளை, கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தொடர்பில், வேட்பாளர் என்ற சட்ட அடிப்டையில் நடவடிக்கை எடுக்குமாறு ஓமல்பே சோபித்த தேரர், தேர்தல்கள் ஆணைக்குழுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.