MCC குழு அறிக்கையின் குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு

MCC குழு அறிக்கையின் குற்றச்சாட்டுகளை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்தது

by Staff Writer 29-06-2020 | 5:32 PM
Colombo (News 1st) சர்ச்சைக்குரிய MCC உடன்படிக்கை தொடர்பில் பேராசிரியர் லலித்தசிறி குணருவன் தலைமையிலான குழுவினால் நல்லாட்சி அரசாங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் MCC உடன் 2 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அவ்வேளையில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்திற்கு 10 மில்லியன் டொலர் MCC இனால் வழங்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் லலித்தசிறி குணருவனின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அதற்கான எவ்வித அறிக்கையும் நிதியமைச்சில் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. MCC இனால் இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வித பணமும் வழங்கப்படவில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அண்மையில் கூறியிருந்தது. அமெரிக்க அரசாங்கத்தினால் வௌியிடப்பட்ட இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பின் மூலம் விடயம் தொடர்பில் ஆராய்ந்த குழுவின் நம்பகத்தன்மை தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியும் அரசாங்கமும் தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை சிரமத்திற்கு உள்ளாக்கும் வகையில் உத்தியோகபூர்வ வளங்களை பயன்படுத்துவது இதன்மூலம் புலப்படுவதாகவும் அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தல் காலத்தில் MCC தொடர்பில் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி மக்களை ஏமாற்றியதுடன் மீண்டும் தேர்தல் காலத்தில் அந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தயாராகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக்காலத்தில் சில அடிப்படை ஏற்பாட்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன் அந்த உடன்படிக்கைகள் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் COVID - 19 வைரஸ் தொற்று காலத்தில் ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளிடம் இருந்தும் மருத்துவ உதவிகள் கிடைத்துள்ள போதிலும் அந்த நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்பதனை அறிவிக்க அரசாங்கம் தவறியுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், MCC உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா இல்லையா என்பது தொடர்பில் அரசாங்கம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கத்திடம் கோரியுள்ளது. உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில்லையாயின் அது தொடர்பில் அரசாங்கத்தின் இறுதித் தீர்மானம என்ன என்பது தொடர்பில் நாட்டிற்கு அறிவிக்குமாறும் ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.