ETI, The Finance நிறுவன வைப்பாளர்களுக்கு நிவாரணம்

ETI, The Finance நிறுவன வைப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 29-06-2020 | 6:56 PM
Colombo (News 1st) ETI மற்றும் 'த பினான்ஸ்' (The Finance) நிறுவனங்கள் தொடர்பில் இன்றே சட்ட ஆலோசனைகளைப் பெற்று பணம் வைப்பிலிட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, மத்திய வங்கி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி, திறைசேரி மற்றும் பணம் வைப்பிலிட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ETI மற்றும் The Finance நிறுவனங்களில் பணம் வைப்பிலிட்டவர்களுக்கு பணம் மீள வழங்கப்படும் முறை தொடர்பில் ஆராய்வது தொடர்பிலும் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (29) நடைபெற்ற கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. இதில் முதல் கட்டமாக 2 நிறுவனங்களிலும் 6 இலட்சத்திற்கும் குறைவான பணத்தை வைப்பிலிட்டவர்களுக்கு பணத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு நிறுவனங்களுக்கும் சொந்தமான அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் அல்லது ஏனைய வாடிக்கையாளர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தினார். அடுத்த நிதிச்சபை கூட்டத்தில் மக்கள் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் குறைகளை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர், பேராசிரியர் டபிள்யூ.டி. விஜேசிங்க உறுதியளித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.