முகக்கவசம் அணியாதோருக்கு எச்சரிக்கை

முகக்கவசம் அணியாதோருக்கு எச்சரிக்கை

by Staff Writer 29-06-2020 | 2:48 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் பொது இடங்களில் முகக்கவசமின்றி நடமாடிய 1,280 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொது இடங்களில் முக்ககவசமின்றி நடமாடுவோரை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் நேற்று (28) முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பிரகாரம், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் பயணிப்போரை சுற்றுவளைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களின் பெயர், விலாசம், அவர்கள் பயணித்த இடங்கள், நேரம் உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்து தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அத்துடன், அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கும் பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். நாட்டில் கொரோனா வைரஸ் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளர், கொரோனா இரண்டாம் அலை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாலும் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். COVID - 19 தொடர்பில் சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமைய தொடர்ந்தும் செயற்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.