by Staff Writer 27-06-2020 | 8:42 PM
Colombo (News 1st) MCC உடன்படிக்கையின் நிபந்தனைகளைத் திருத்துவதற்கு இணக்கம் தெரிவிப்பதாயின், அது தொடர்பான தொழில்சார் ஆய்வின் பின்னர் மக்கள் கலந்துரையாடல் மற்றும் பாராளுமன்ற பெரும்பான்மையின் அனுமதியின்றி நடைமுறைப்படுத்தக்கூடாது என உடன்படிக்கை குறித்து மீளாய்வு செய்த குழு பரிந்துரைத்துள்ளது.
அவ்வாறான விடயத்திற்கு MCC நிறுவனம் இணங்காவிட்டால், உடன்படிக்கையை நிராகரிக்க வேண்டும் என அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
MCC பிரேரணை தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தமது இறுதி அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளித்தது.
பேராசிரியர் லலிதசிறி குணருவன் தலைமையிலான அந்தக் குழுவில், டீ.எஸ்.ஜயவீர, நிஹால் ஜயவர்தன, நாலக ஜயவீர ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர்.
இந்த MCC உடன்படிக்கை சட்டமூலத்தின் பாரதூரமான பல விடயங்கள் குறித்து, குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் MCA Sri Lanka எனப்படும் நிறுவனத்தினால், MCC திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
அமெரிக்காவின் சட்டங்களுக்கு முரணாக இந்த நிறுவனத்தில் சட்ட ரீதியான விடயங்களை முன்னெடுக்க முடியாது.
அதனால், அந்நிறுவனத்தின் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் MCC நிறுவனத்திற்கே உள்ளது.
திட்டத்துடன் தொடர்புடைய தரவுகள், தகவல்கள் உள்ளிட்ட புலமைச் சொத்துக்கள் MCC நிறுவனத்திற்கு உரித்துடையதாகும்.
சாதாரணமாக நாட்டிற்குக் கிடைக்கும் வௌிநாட்டு கடன் திட்டங்களை திறைசேரி நடைமுறைப்படுத்தும் முறைமைக்கு முரணாக, வேறு நிறுவனமொன்றின் ஊடாக முன்னெடுக்கும் இந்த செயற்பாட்டை, சட்டத்தைக் கருத்திற்கொள்ளாத செயற்பாடாகவே மீளாய்வுக் குழு பார்க்கின்றது.
குறித்த திட்டத்திற்கான விலைமனுக் கோரல், நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட முறைமையின் கீழ் இடம்பெறாது எனவும் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்றிட்டங்களில் சிக்கல் நிலை ஏற்படுமாயின், அதன் பொறுப்பை இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தி, அவர்களால் நாட்டிலிருந்து வௌியேற முடியும் எனவும் இந்தக் குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறான நிலைமை ஏற்படுமாயின், இலங்கை மிகவும் கடினமான நிலையை எதிர்நோக்கும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய, உடன்படிக்கை அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அது பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டால், அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள சில சட்டங்கள் இலங்கைக்கு செல்லுபடியானதாக அமையும்.
நல்லாட்சி அரசாங்கம் இந்த உடன்படிக்கையின் சட்டமூலம் தொடர்பில் இணக்கம் காணப்படவிருந்த நிலையில், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமர் நீக்கப்பட்டு, மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்டமை , அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் நிலவரத்தினால் அது இடம்பெறவில்லை என மீளாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, சர்வதேச உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவது நிறைவேற்றதிகாரத்திற்கு மாத்திரம் உரிய விடயம் அல்லவெனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது நாட்டு மக்களின் இறையாண்மையில் தாக்கம் செலுத்தும் விடயம் எனவும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்தும் உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடுகையில், பாராளுமன்ற பெரும்பான்மையின் அனுமதி அவசியம் எனவும், முழுமையான நிபந்தனைகள் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் மீளாய்வுக் குழு யோசனை முன்வைத்துள்ளது.
2004 ஆம் ஆண்டிலிருந்த அரசாங்கம் MCC திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், 2005 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை அது குறித்து எந்தவொரு செயற்பாடும் இடம்பெறவில்லை என மீளாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், 2005ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக MCC கொடுப்பனவிற்கான கோரிக்கை விடுத்ததாக, அமெரிக்கத் தூதரகத்தை மேற்கோள் காட்டி டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.
நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ந்தும் சுட்டிக்காட்டிய விடயங்கள், மீளாய்வுக் குழுவின் அறிக்கையிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
MCC இணக்கப்பாடு, நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் இறையாண்மையைக் கருத்திற்கொள்ளாது நடைமுறைப்படுத்தப்படும் ஒன்றென்பது தெளிவாகியுள்ளது.
எனினும், உடன்படிக்கையின் நிபந்தனைகளைத் திருத்தி பாராளுமன்றத்தின் அனுமதியுடன் MCC நடைமுறைப்படுத்தப்படுமா என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது.
நாட்டின் போக்குவரத்துக் கட்டமைப்பை அபிவிருத்தி செய்தல் மற்றும் காணி தொடர்பான சட்டங்களை மறுசீரமைத்தல் உள்ளிட்ட இரண்டு யோசனைகள் இதில் காணப்படுகின்றன.
இதில் காணி தொடர்பான திட்டம், மீளாய்வுக் குழுவின் அறிக்கையில் அதிகம் விமர்சிக்கப்பட்டுள்ளது.
MCC தொடர்பான ஆரம்ப பேச்சுவார்த்தைகளில் போக்குவரத்து மற்றும் காணி விடயங்களைத் தவிர, மின்சக்தி உள்ளிட்ட சில துறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மீளாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
மீளாய்வுக் குழுவின் அறிக்கை வௌியிடப்படும் சந்தர்ப்பத்தில், அமெரிக்கத் தூதுவர் மின்சக்தி அமைச்சரைச் சந்தித்து மின்சக்தித் திட்டங்களுக்கு அமெரிக்காவினால் ஒத்துழைப்பு வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
MCC திட்டத்தின் கீழ், உத்தேச 480 மில்லியன் டொலரை ஏதேனுமொரு வகையில் பெற்றுக்கொள்ளும் முயற்சி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றதா?