by Staff Writer 27-06-2020 | 6:29 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றின் மத்தியில் உலக வங்கியில் இருந்தோ அல்லது வேறெந்த தரப்பினரிடமிருந்தோ எந்தவொரு நிதியும் நாட்டிற்குக் கிடைக்கவில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
திரைப்படத்துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (26) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இதனை தெரிவித்தார்.
திரைத்துறையின் வளர்ச்சிக்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மானியம் வழங்குவதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கக் காலத்தில் வரிச்சலுகைகள் நீக்கப்பட்டதால் தாம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்த கலைஞர்கள், தமக்குரிய வரிச்சலுகைகளை மீள பெற்றுக்கொடுக்குமாறு இதன்போது பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திரையரங்குகளின் மின்சாரப்பட்டியல்களை வர்த்தக வரையறைகளுக்குள் உட்படுத்தாது கைத்தொழில் துறையின் கீழ் கணக்கிடுமாறும் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மின்சார சபையுடன் இணைந்து தீர்மானமொன்றுக்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கலாசார விவகார அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாட்டின் அனைத்து திரையரங்குகளும் இன்று முதல் மீளத் திறக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மேடை நாடகங்கள் மற்றும் இசைநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்படுவதாக கலாசார விவகார அமைச்சு அறிவித்துள்ளது.