கடன் சலுகை வழங்கும்போது அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு பிரதமர் கோரிக்கை

கடன் சலுகை வழங்கும்போது அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு பிரதமர் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

27 Jun, 2020 | 8:22 pm

Colombo (News 1st) கடன் சலுகை வழங்கும்போது அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு முன்னுரிமையளிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அலரி மாளிகையில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் UNICEF நிறுவன பிரதிநிதிகளுடன் நேற்று (26) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பூகோள சிறுவர் நலனோம்பல் மூலம் கிடைக்கும் அனுகூலத்தால் இலங்கையின் சமூக பாதுகாப்புக் கட்டமைப்பை வலுவடையச் செய்தல் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள், வயோதிபர்கள், விசேட தேவையுடையவர்கள் மற்றும் முன்னுரிமையளிக்கப்பட வேண்டிய துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் தொடர்பில் பிரதமர் இதன்போது ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் குழுவினருக்கு எடுத்துக்கூறியுள்ளார்.

இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அனைத்து அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கும் சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியம் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சம காலத்தில் சர்வதேச மட்டத்தில் நிலவும் இந்த பிரச்சினையானது சகல நாடுகளினதும் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவினை ஏற்படுத்தியுள்ளதுடன், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பன அவ்வறான நாடுகளுக்கு முன்னுரிமையளிக்க வேண்டும் என பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

COVID-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான இணைப்பாளர் ஹனா சிங்கர் பாராட்டியதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்