MCC நிதியில் 10 மில்லியன் அமெரிக்க டொலரை நல்லாட்சி அரசாங்கம் பெற்றதா?

by Staff Writer 26-06-2020 | 8:46 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் Millennium Challenge Corporation எனப்படும் MCC திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட 480 மில்லியன் டொலர் நிதியில் இதுவரை எந்தவொரு தொகையும் வழங்கப்படவில்லை என அமெரிக்க தூதுவராலயம் தெரிவித்தது. MCC செயற்றிட்டத்தில் 10 மில்லியன் டொலரை கடந்த அரசாங்கம் பெற்றதாக மீளாய்வுக் குழுவின் அறிக்கையில் வௌியாகியுள்ள தகவல் தொடர்பாக வினவிய போதே அமெரிக்க தூதரகம் இதனைத் தெரிவித்தது. MCC ஒப்பந்த சட்டமூலம் தொடர்பான மறு ஆய்வுக் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் நேற்று கையளிக்கப்பட்டது. 2017, 2018 ஆம் ஆண்டுகளில் MCC ஒப்பந்தம் இரண்டு கட்டங்களாக கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், அதற்காக 10 மில்லியன் டொலர் பெறப்பட்டுள்ளதாக மறு ஆய்வுக் குழுவின் தலைவர் பேராசிரியர் லலிதசிறி குணருவன் உறுதிப்படுத்தினார். எவ்வாறாயினும், மறு ஆய்வுக்குழு உறுதிப்படுத்தலை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க கடந்த பெப்ரவரி மாதம் வௌியிட்டிருந்தார். இந்நிலையில், MCC தொடர்பில் அமெரிக்கத் தூதரகத்திடம் வினவிய போது, இந்தத் திட்டம் தொடர்பான விடயங்களுக்கு கால அட்டவணையுடன் பதிலளித்தனர். தூதரகத்தினால் வௌியிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய MCC உடன்படிக்கைக்கு இலங்கை தகுதியான இடத்திலுள்ளதாக 2015 டிசம்பர் மாதம் தெரிவிக்கப்பட்டது. 2016 ஜனவரி, நவம்பர் மாதங்களுக்கு இடையிலான காலப்பகுதியில், போக்குவரத்து வசதி மற்றும் காணிச் சட்டத்தை மறுசீரமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் பணம் செலுத்தப்பட்டு ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், MCC உடன்படிக்கைக்கு 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை அரசாங்கம் தகுதி பெற்றது. முழுமையான திட்ட அறிக்கை ​2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் MCC-க்கு வழங்கப்பட்டது. 2018 ஜூலை மாதம் திட்டத்தை MCC முகாமைத்துவம் அங்கீகரித்ததுடன், அதே வருடம் செப்டம்பர் மாதத்தில் அப்போதைய ஜனாதிபதி நியூயோர்க் நகரில் பிரதம நிறைவேற்றதிகாரியை சந்தித்தார். திறைசேரியின் செயலாளர் மற்றும் இருதரப்பு பிரதிநிதிகள், நிபந்தனைகள் தொடர்பில் 2018 ஒக்டோபர் மாதம் பேச்சுவார்த்தை நடத்தி , 2019 ஏப்ரலில் MCC நிறுவனம் 480 மில்லியன் டொலரை அங்கீகரித்ததுடன், அந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்தில் இலங்கையின் அமைச்சரவை திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியது. அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அமெரிக்காவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்தது. எவ்வாறாயினும், MCC உடன்படிக்கை தொடர்பில் தூதரகம் ஒரு விடயத்தை மறந்துள்ளது. அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தங்கிருந்த அலரிமாளிகையில் MCC அலுவலகம் நடத்திச்செல்லப்பட்டதே அந்த விடயமாகும். MCC தொடர்பான மீளாய்வுக் குழுவின் அறிக்கையில் அபாயகரமான விடயங்கள் பலவற்றை அம்பலப்படுத்திய போது, அமெரிக்கத் தூதுவர் Alaina B. Teplitz நேற்று அவசரமாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்திந்துள்ளார். இலங்கையின் மின்சக்தி அபிவிருத்தித் திட்டங்களுக்கு தேவையான உதவியை வழங்க அமெரிக்கா தயாராகவுள்ளதாக இதன்போது அமெரிக்கத் தூதுவர் கூறியுள்ளார். நாட்டில் LNG மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராகவுள்ளதாகவும் மஹிந்த அமரவீரவிடம், தூதுவர் குறிப்பிட்டுள்ளார். நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கு புதிய தொழில்நுட்பம் தேவைப்படுமாயின் அது குறித்தும் கவனம் செலுத்த முடியும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். வாகன நெரிசலைக் குறைத்து, போக்குவரத்து கட்டமைப்பை விருத்தி செய்தல் மற்றும் காணி மறுசீரமைப்பு உள்ளிட்ட செயற்றிட்டங்கள் உத்தேச MCC உடன்படிக்கையில் திட்டமிடப்பட்டுள்ளன. MCC தொடர்பான மீளாய்வுக் குழுவின் அறிக்கையில், காணி தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எரிசக்தி தொடர்பில் தற்போது அவதானம் செலுத்துவது, காணி தொடர்பான நடவடிக்கைகளை MCC எரிசக்தி செயற்றிட்டத்தினூடாக மேற்கொள்வதற்காகவா? லைபீரியா, பெனின், கானா போன்ற நாடுகள் MCC நிறுவனத்தின் மீள் புதுப்பித்தல் துறைக்கான செயற்றிட்டங்களை ஆரம்பித்துள்ளன. மீள் சக்தி துறையில் MCC உடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள நேபாளம் தற்போது முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நமது நாட்டின் எரிசக்தி தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் தற்போது கலந்துரையாடுவது, மற்றுமொரு வழியில் MCC-யைக் கொண்டுவரும் நோக்கிலா? அமெரிக்காவின் Megaport வேலைத்திட்டத்தின் கீழ், கொழும்பு துறைமுகத்தை சூழ எல்லையிடல் மற்றும் கடற்பாதுகாப்பு நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படுவதாக புதிய அறிக்கையொன்றினூடாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் Megaport வேலைத்திட்டம், அணுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்கும் நோக்கில், உலகின் 31 நாடுகளின் மிகவும் முக்கியத்துவம் மிக்க துறைமுகங்களை சூழ நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்புப் பணியகம், உலகளாவிய ரீதியில் 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் தயாரித்த அறிக்கையில், இலங்கையின் கடற்பாதுகாப்பு நடைமுறை பாதுகாப்பற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் ISIS பயங்கரவாதக் குழுவினால் தூண்டப்பட்ட தாக்குதல் என அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்புப் பணியகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக FBI நிறுவனத்துடன் இலங்கை பொலிஸார் ஒத்துழைப்புடன் செயற்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.