சிறைச்சாலை வழக்கின் சந்தேகநபர்களுக்கு எச்சரிக்கை

வெலிக்கடை சிறைச்சாலை வழக்கின் சந்தேகநபர்களுக்கு விசேட மூவரடங்கிய நீதிமன்றம் எச்சரிக்கை

by Staff Writer 26-06-2020 | 4:17 PM
Colombo (News 1st) வெலிக்கடை சிறைச்சாலை வழக்கின் முதலாவது மற்றும் இரண்டாவது பிரதிவாதியான பொலிஸ் இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ, முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோரின் பிணையை இரத்து செய்து, அவர்களை விளக்கமறியிலில் வைக்க வேண்டி ஏற்படும் என கொழும்பு விசேட மூவரடங்கிய நீதிமன்றம் இன்று எச்சரிக்கை விடுத்தது. அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதற்கு இந்த இருவரும் வருகை தந்ததன் பின்னர் வழக்கு மற்றும் முறைப்பாட்டிற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்ததாக சட்ட மா அதிபர் மன்றுக்கு அறிவித்தார். இதனைக் கருத்திற்கொண்ட நீதிமன்றம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கொன்று விசாரணையில் உள்ள நிலையில், பிரதிவாதிகள் செயற்பட ​வேண்டிய முறை தொடர்பில் சட்ட வரையறை உள்ளதாகவும், பிரதிவாதிகள் விதிமுறைகளை மீறி செயற்பட்டால் அது தொடர்பில் நீதிமன்றத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் குழாம் இதன்போது பிரதிவாதிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளது. வழக்கின் மேலதிக விசாரணை அடுத்த மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மஞ்சுள திலகரட்ண ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது