கொள்கலன்களில் பீடி இலைகள்: CID-யிடம் உதவி கோரல்

கொள்கலன்களில் பீடி இலைகள்: விசாரணைகளுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி கோரப்பட்டுள்ளது

by Staff Writer 26-06-2020 | 6:27 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டு சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி கோரப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் பெறுமதி 122 மில்லியன் ரூபாவாகும். 24,000 கிலோகிராம் எடையுடைய இந்த பீடி இலைகள் கடந்த மார்ச் 14 ஆம் திகதி "கேப் மெமோ' என்ற கப்பலில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன. கட்டுநாயக்க - இறக்குமதி வசதியளித்தல் பிரிவிலுள்ள முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலையின் தேவைக்கான மூலப்பொருட்களைக் கொண்டுவரும் போர்வையில் இந்த பீடி இலைகள் சென்னையிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. இலங்கை சுங்கத்தின் துறைமுகங்கள் கட்டுப்பாட்டு பிரிவினர் நேற்று மேற்கொண்ட சோதனைகளின் போது குறித்த இரண்டு கொள்கலன்களும் கைப்பற்றப்பட்டன. சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்தின் பதில் ஊடகப் பேச்சாளர், சுங்க அத்தியட்சகர் லால் வீரகோன் தெரிவித்தார். வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கட்டுநாயக்க - இறக்குமதி வசதியளித்தல் பிரிவிலுள்ள தொழிற்சாலையொன்றின் பிரதிநிதி ஒருவரிடமும் இது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது. CCTV காணொளிகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை சட்டரீதியாக நாட்டிற்கு இறக்குமதி செய்திருந்தால் 100 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட வரியை செலுத்த வேண்டி ஏற்பட்டிருக்கும் என சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.