கிழக்கு முனையத்தை வௌிநாடுகளுக்கு வழங்கினால் துறைமுகங்கள் அதிகார சபை வலுவிழக்கும் என எச்சரிக்கை

by Staff Writer 26-06-2020 | 9:12 PM
Colombo (News 1st) அமெரிக்க அழுத்தம் பேசுபொருளாகியுள்ள நிலையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வௌிநாடுகளுக்கு வழங்குவதற்கு முயற்சிப்பதாக மீண்டும் பேசப்படுகின்றது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் நாட்டிலுள்ள ஆழமான துறைமுகமாகும். பாரிய கப்பல்களை இலகுவாக நங்கூரமிடக்கூடிய இடமாக இது திகழ்கின்றது. துறைமுகங்கள் அதிகாரசபை பெருந்தொகை நிதிச்செலவில் ஆரம்பகட்ட நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்தனர். அவ்வாறான நிலையில், கடந்த அரசாங்கம் இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கை கூட்டுத் திட்டமாக கிழக்கு முனையத்தை நடத்திச் செல்வதற்கு பிரேரித்தது. எனினும், இந்த முனையம் எமக்குரியதாகக் காணப்பட வேண்டும் என துறைமுக தொழிற்சங்கங்கள் பாகுபாடின்றி கூறுகின்றன. இது இல்லாமற்போனால், துறைமுகங்கள் அதிகார சபை வலுவிழக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்தத் துறைமுகத்தில் பொருத்தக்கூடிய மூன்று பாரந்தூக்கிகள் கொண்டுவரப்பட்டு ஒரு வாரமாகியுள்ளது. அதனைப் பொருத்துவதற்கு இடமளிக்காத சக்தியொன்று, துறைமுகத்திற்குள் செயற்படுகின்றது.