அபே தே-க்கு எதிரான வழக்கு நிராகரிப்பு

அபே தே-க்கு எதிரான வழக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தால் நிராகரிப்பு

by Staff Writer 26-06-2020 | 9:02 PM
Colombo (News 1st) ''அபே தே" தேயிலை பொதியிடல் மற்றும் விவரத்துணுக்கு (Label) அச்சிடுதல் தொடர்பில் ஹரிசன்ஸ் கொழும்பு வரையறுக்கப்பட்ட நிறுவனம் (Harrisons Colombo Ltd) மற்றும் இன்டர்நெஷனல் கொஸ்மெட்டிக்ஸ் தனியார் நிறுவனம் (International Cosmetics (Pvt) Ltd) ஆகியவற்றுக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. ஹரிசன்ஸ் கொழும்பு வரையறுக்கப்பட்ட நிறுவனம் மற்றும் இன்டர்நெஷனல் கொஸ்மெட்டிக்ஸ் தனியார் நிறுவனம் ஆகியவற்றிற்கு எதிராக வட்டவல டீ சிலோன் (Watawala Tea Ceylon Limited) நிறுவனத்தினூடாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் நீதிபதி சம்பத் விஜயரத்ன முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. "அபே தே" தேயிலை உற்பத்தியில் பொதியிடல் மற்றும் விவரத்துணுக்கு அச்சிடுதல் ஆகிய செயற்பாடுகள் தங்களின் உற்பத்திகளின் பொதியிடல் மற்றும் விவரத்துணுக்கு அச்சிடுதல் போல அல்லது அதனை ஒத்த வகையில் இடம்பெறுவதாகத் தெரிவித்து , வட்டவல டீ சிலோன் நிறுவனம் இந்த வழக்கை தாக்கல் செய்தது. இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த கொழும்பு வணிக மேல் நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு எதிராக பிறப்பித்திருந்த தடையையும் நீக்கியது. ஏதேனும் ஒரு பொருளை அதன் நிறத்தை அடிப்படையாக வைத்து கொள்வனவு செய்யும் பழக்கம் தற்போதைய நுகர்வோரிடம் இல்லை என Julius & Creasy சட்ட நிறுவனத்தின் ஆலோசனையின் கீழ், ஹரிசன்ஸ் கொழும்பு வரையறுக்கப்பட்ட நிறுவனம் மற்றும் இன்டர்நெஷனல் கொஸ்மெட்டிக்ஸ் தனியார் நிறுவனம் ஆகியன சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் கூறினர். ஏதேனும் வர்த்தகக் குறியீட்டை ஒதுக்கி அடையாளப்படுத்துவது, ஒரே நிறத்திலான அல்லது பொதியிடல் செயற்பாடுகள் அல்லவெனவும் சடட்டத்தரணிகள் குறிப்பிட்டனர். கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, இந்த நாட்டின் புலமைசார் சொத்துக்கள் மற்றும் குறியீடுகள் தொடர்பில் மிக முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது. "அபே தே" தேயிலை உற்பத்திகளை இன்று தொடக்கம் நுகர்வோர் கொள்னவனவு செய்ய முடியும்.