இலங்கையின் மின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்: அமெரிக்க தூதுவர்

இலங்கையின் மின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்: அமெரிக்க தூதுவர்

இலங்கையின் மின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்: அமெரிக்க தூதுவர்

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2020 | 4:41 pm

Colombo (News 1st) இலங்கையின் மின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்க அமெரிக்கா தயாராகவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Alaina B. Teplitz கூறியுள்ளார்.

மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நேற்று (25) இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் LNG எரிவாயு மின்னுற்பத்தி உள்ளிட்ட மின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பை வழங்க இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இணக்கம் தெரிவித்ததாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான நாட்டின் மொத்த மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யத் தேவையான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது கூறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நாட்டில் LNG எரிவாயு மின்சார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நுரைச்சோலை புதிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மற்றும் முதலாவது LNG எரிவாயு மின்னுற்பத்தி வேலைத்திட்டங்கள் என்பன சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

உமா ஓயா, மன்னார் காற்றாலை மின் திட்டம், பிராட்லேண்ட் மற்றும் யாழ். சூரியகல மின் திட்டங்கள் என்பன இந்த வருட இறுதிக்குள் திறக்கப்படுமென அமைச்சர் அறிவித்துள்ளார்.

உத்தேச நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் நாட்டின் முதலாவது LNG ஆலை உள்ளிட்ட மின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களினால், 2023 ஆம் ஆண்டளவில் பொதுமக்களிடம் குறைந்தளவிலான மின்கட்டணங்களே அறிவிடப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் வழங்க அமெரிக்கா தயாராகவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Alaina B. Teplitz உறுதியளித்ததாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும் அமெரிக்கா தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்