பீடி சுற்றும் இலைகளுடன் 2 கொள்கலன்கள் கைப்பற்றல்

122 மில்லியன் ரூபா பெறுமதியான பீடி சுற்றும் இலைகள் அடங்கிய 2 கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

by Staff Writer 25-06-2020 | 5:29 PM
Colombo (News 1st) 122 மில்லியன் ரூபா பெறுமதியான, சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி சுற்றும் இலைகள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். துறைமுகக் கட்டுப்பாட்டு பிரிவினூடாக கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்தின் பதில் ஊடகப் பேச்சாளர், சுங்க அத்தியட்சகர் லால் வீரகோன் குறிப்பிட்டார். சந்தேகநபரைத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். கட்டுநாயக்க இறக்குமதி வசதியளித்தல் பிரிவிலுள்ள பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றுக்கு நூல் கொண்டு வரும் போர்வையில் இந்தியாவிலிருந்து பீடி சுற்றும் இலைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த பீடி சுற்றும் இலைகளை சட்டரீதியாக நாட்டிற்கு இறக்குமதி செய்திருந்தால் 100 மில்லியன் ரூபா வரி செலுத்த வேண்டி ஏற்பட்டிருக்கும் என சுங்க அத்தியட்சகர் லால் வீரகோன் தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் திகதி 'கேப் மெமே' என்ற கப்பலில் இந்த 24 ஆயிரம் கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.