கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை வௌிநாட்டவருக்கு விற்பனை செய்ய வேண்டாம் என கோரிக்கை

by Bella Dalima 25-06-2020 | 8:51 PM
Colombo (News 1st) சர்வதேச அழுத்தங்களால் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்படுவதற்கு எதிராக தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் பாரந்தூக்கிகளை நிறுவி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதற்கமைய, மூன்று பாரந்தூக்கிகள் கடந்த 20 ஆம் திகதி நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன. எனினும், அவற்றைப் பொருத்துவதற்கு துறைமுக அதிகார சபை இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை என தொழிற்சங்கம் கூறுகின்றது. நுழைவாயில் வீதியை மறித்து இன்று எதிர்ப்பில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர், பாரந்தூக்கிகளைப் பொருத்தி கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகளை துறைமுக அதிகார சபையினூடாக ஆரம்பிக்குமாறு வலியுறுத்தினர். இதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைப் பாதுகாக்கும் அமைப்பு ஜனாதிபதிக்கு நேற்று (24) கடிதமொன்றை அனுப்பியிருந்தது. சுபீட்சத்தின் நோக்கு கொள்கையில் குறிப்பிடப்பட்டவாறு, கிழக்கு முனையத்தை துறைமுக அதிகார சபையின் கீழ் நிறுவும் யோசனையை நடைமுறைப்படுத்துமாறு அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாரந்தூக்கிகள் நிறுவப்படாமல் தொடர்ந்தும் கப்பல்களிலேயே காணப்படுவதால், அது கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகியுள்ளதாக அந்தக் கடிதத்தில் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.