by Staff Writer 25-06-2020 | 10:51 AM
Colombo (News 1st) கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (25) முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார்.
தற்போது கருணா அம்மானிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் கருணா அம்மான் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் கடந்த 19 ஆம் திகதி நாவிதன்வௌி பகுதியில் அவர் வௌியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க வருமாறு கடந்த 23 ஆம் திகதி கருணா அம்மானுக்கு அறிவிக்கப்பட்டது.
எனினும், உடல்நலக்குறைவு காரணமாக தனக்கு சமூகமளிக்க முடியாது என சட்டத்தரணியூடாக கருணா அம்மான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கருணா அம்மானின் கூற்று தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த குழு கிழக்கு மாகாணத்திற்கு சென்று சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, கருணா அம்மானின் கருத்து தொடர்பில் சிவில அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.