உத்தேச MCC உடன்படிக்கையில் பாதகமான பல விடயங்கள் காணப்படுவதாக மீளாய்வுக் குழு அறிவிப்பு

உத்தேச MCC உடன்படிக்கையில் பாதகமான பல விடயங்கள் காணப்படுவதாக மீளாய்வுக் குழு அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

25 Jun, 2020 | 6:28 pm

Colombo (News 1st) உத்தேச MCC உடன்படிக்கை சட்டமூலத்தில் பாதகமான பல விடயங்கள் காணப்படுவதாக மீளாய்வுக் குழு அறிவித்துள்ளது.

MCC மீளாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று கையளிக்கப்பட்டது.

பேராசிரியர் லலிதசிறி குணருவனின் தலைமையிலான குழுவினால் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்ட இந்த அறிக்கையின் சுருக்கம் தொடர்பில், ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

நிபுணர் குழுக்கள் ,தொண்டர் அமைப்புக்கள் , அரச நிறுவனங்கள், தனிநபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்று ஆறு மாத காலம் விசாரணைகளை மேற்கொண்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக MCC உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்த மீளாய்வுக் குழுவின் தலைவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞானத் துறை பேராசிரியர் லலித்தசிறி குணருவன் கூறியுள்ளார்.

அதற்கமையை, 7.4 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 2.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான கணக்கு விபரங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

சட்டப்பூர்வமான செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவில்லை என காணி ஆணையாளர் கூறியுள்ளதாக மீளாய்வுக் குழுவின் தலைவர் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்றிட்டத்திற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் அதற்கு எதிரான கருத்துக்கள் மற்றும் தர்க்கங்களை முன்வைப்பது உடன்படிக்கைக்கு பாதகமாக அமையும் எனவும் பேராசிரியர் லலித்தசிறி குணருவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, MCC மீளாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் நேற்று (24) கையளிக்கப்பட்டது.

அமைச்சரவையின் அனுமதியுடன், பிரதமர் நியமித்த குழுவானது, MCC உடன்படிக்கை தொடர்பில் ஆறு மாதங்களாக ஆய்வு செய்தது.

சிபாரிசுகள் அடங்கிய இந்த அறிக்கை பிரதமரினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

இதேவேளை, ஆளும் கட்சியினுள் MCC ஒப்பந்தம் தொடர்பாக தற்போது முரண்பாடான நிலைப்பாடு காணப்படுகின்றது.

MCC ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட மாட்டாது என அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் மீண்டும் உறுதி அளிக்கப்பட்டது.

 

எனினும், MCC தொடர்பாக அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்து நேற்று (24) கருத்து வௌியிட்டார்.

நாட்டிலுள்ள காணிகளை அமெரிக்கா தேவைக்கு ஏற்றவாறு வரைபடம் அமைத்து வழங்கும். அதேபோன்று, தனியான விசேட பொருளாதார வலயமொன்றை அதிகாரிகளுக்கு தேவையானவாறு தயாரிக்கும். MCC பெயரில் அல்ல லிபர்ட்டி பிளாஸா எனும் பெயரில் வந்தாலும், அவ்வாறு ஒப்பந்தத்தைக் கொண்டு வரும் அரசாங்கத்தில் நான் ஒருநாளேனும் இருக்க மாட்டேன்.

என விமல் வீரவன்ச கூறினார்.

எனினும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல மாறுபட்ட கருத்தொன்றை கண்டியில் இன்று கூறினார்.

MCC என்பதொரு பெயராகும். அதன் உள்ளடக்கமே எமக்கு முக்கியமாகும். அன்று நாம் பார்த்த உள்ளடக்கம் தற்போது மாறியிருக்கலாம். ஏனெனில் அன்று பாரிய அழுத்தமொன்று காணப்பட்டது. இராஜதந்திர மட்ட கொடுக்கல் வாங்கல்களை, இராஜதந்திர மட்டத்திலேயே முன்னெடுக்க வேண்டும். கிழித்து எறிவதாக சஜித் பிரேமதாசவே அதிக முறை கூறினார். மேடைகளில் எம்மவர்களும் கூறியிருப்பார்கள். கிழித்து எறிவது அல்ல, உண்மையாகவே நிராகரிக்க வேண்டும். அதன் உள்ளடக்கம் எமக்கு பாதகமற்றது எனின், அது தொடர்பில் ஆய்வு செய்யவதில் தவறில்லை

இதேவேளை, MCC உடன்படிக்கை மூலம் நாட்டிற்கு பாதகம் ஏற்படாமல், உதவியைப் பெற முடியுமாக இருந்தால், நாடு பொருளாதார கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள இச்சூழலில் அதனைப் பெற முடியும் எனவும் நாட்டிற்கு அதனால் பாதகம் ஏற்படும் என்றால் அதனை ஏற்க முடியாது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டார்.

 

 

இதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் MCC உடன்படிக்கையின் உள்ளடக்கம் தொடர்பில் அறியாமல் இருப்பது தௌிவாகின்றது.

நாட்டின் கடனுக்கும் MCC-க்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்