பிரேஸில் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் உத்தரவு

பிரேஸில் ஜனாதிபதிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று விடுத்துள்ள உத்தரவு

by Staff Writer 24-06-2020 | 8:28 AM
Colombo (News 1st) பிரேஸில் ஜனாதிபதி ஜெயார் பொல்ஸனாரோ (Jair Bolsonaro), தலைநகர் மற்றும் ஏனைய பகுதிகளுக்கு செல்லும் போது பாதுகாப்பான முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும் என அந்நாட்டின் நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. முகக்கவசம் அணிதல் தொடர்பிலான சாதாரண பொதுமக்களுக்கான அனைத்து விதிமுறைகளும் அவருக்கும் பொருந்தும் என பிரேஸில் பெடரல் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த சில நாட்களாக பொது இடங்களுக்கு செல்லும் போது பிரேஸில் ஜனாதிபதி முகக்கவசத்தை அணியாது பயணித்திருந்ததாக குற்றஞ்சாட்டியுள்ள நீதிமன்றம், இது பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொதுமக்களை தவறான வழிநடத்தலுக்குட்படுத்தும் விடயமாக கருதுவதாக தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் ஆட்கொல்லி நோய் ஒன்று தொடர்பில் சுகாதார நியமங்களை பேணாமை அடுத்தவர்களின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தும் செயற்பாடு என பிரேஸில் ஜனாதிபதி தொடர்பில் உத்தரவை பிறப்பித்துள்ள நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த வாரங்களில் பல்வேறு மக்கள் சந்திப்புகளில் அவர் இவ்வாறு முகக்கவசத்தை அணியாமல் பகிரங்கமாக கலந்துகொண்டமையை அவதானித்ததன் பின்னரே தாம் இவ்வாறான தீர்ப்பை வௌியிடுவதாகவும் பிரேஸில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் காங்கிரஸ் மற்றும் சுப்ரீம் நீதிமன்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்ப்பாளர்களுடன் இணைந்து வீதிகளில் வரும் போதும் பிரேஸில் ஜனாதிபதி முகக்கவசம் அணிந்திருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரேஸிலில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் செலுத்தப்பட வேண்டும் என்பது விசேட அம்சமாகும். பிரேஸிலில் இதுவரையில் 1,151,479 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதோடு, 52,771 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.