கொழும்பு துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்திக்கு தடையாய் இருப்பது யார்? 

by Staff Writer 24-06-2020 | 8:32 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் (East Container Terminal) மீண்டும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. கடந்த அரசாங்கக் காலத்தில் ஜப்பானும் இந்தியாவும் இலங்கையும் ஒன்றிணைந்து கிழக்கு முனைய வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டதுடன், அப்போது விடுக்கப்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக அது தடுக்கப்பட்டது. எனினும், மீண்டும் அந்தப் பகுதியை இழக்கும் அபாயத்தை துறைமுக அதிகாரசபை எதிர்நோக்கியுள்ளது. கொழும்பு துறைமுகம் மூன்று பகுதிகளைக் கொண்டதாகும். அவற்றில் ஒரு பகுதியான கொள்கலன் முனையம் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமானது. South Asia Gateway Terminals எனப்படும் SAGT முனையம் இலங்கை மற்றும் ஒருங்கிணைந்த நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட நிறுவனத்திற்கு சொந்தமானது. கொழும்பு தெற்கு துறைமுகம் Colombo International Container Terminals என அழைக்கப்படுவதுடன், அதன் பெருவாரியான பங்கு சீனா வசமுள்ளது. அதன்படி, கொழும்பு துறைமுகத்தில் பல கப்பல்களை நிறுத்தி பணிகளை மேற்கொள்வதற்கான பகுதியொன்று துறைமுக அதிகார சபைக்கு இல்லை. இதனால் பெரும் எண்ணிக்கையிலான கப்பல்களை நிறுத்தி வைப்பதற்கு ஏதுவான ஆழமான பகுதி கிழக்கு முனையம் என ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு, ஆரம்பகட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச வங்கியில் பெறப்பட்ட கடன் மூலம் துறைமுக அதிகார சபை இந்த அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஐக்கிய தேசியக் கட்சி அணி கிழக்கு முனையத்தை இந்தியா, ஜப்பான், இலங்கை ஒருங்கிணைந்த வர்த்தகமாக நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக முயற்சித்தது. எனினும், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டில் 2018 ஜூன் 6 ஆம் திகதி கூடிய பொருளாதார சபை அந்த தீர்மானத்தை இடைநிறுத்தி கிழக்கு முனையத்தை இலங்கைக்கு சொந்தமான பங்காக அபிவிருத்தி செய்வதற்கு தீரமானித்தது. அதற்கமைய, 52 நாட்கள் இருந்த அரசாங்கம் மாறிய போது இதற்கு தேவையான அடிப்படை உபகரணங்களைக் கொண்டுவரும் அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்தது. எனினும், மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் அப்போதைய அமைச்சராக சாகல ரத்நாயக்க மீண்டும் ஒருங்கிணைந்த வர்த்தகமாக முன்னெடுக்கத் தேவையான ஆரம்ப கட்ட ஆவணங்களைத் தயாரித்துள்ளார். துறைமுக அதிகார சபை பணம் கொடுத்து சீனாவிலிருந்து இறக்குமதி செய்த மூன்று பாரந்தூக்கிகளும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. எனினும், அவற்றை தரையிறக்கவோ அல்லது கிழக்கு முனையத்தில் பொருத்தவோ கடந்த சனிக்கிழமை முதல் இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மறைமுக அதிகார செயற்பாட்டின் தலையீடு காரணமாக கிழக்கு முனையம் மீண்டும் இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கை ஒருங்கிணைந்த வர்த்தகத் திட்டத்தின் கீழ் கொண்டுவர முயற்சிக்கப்படுவதாக பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டுகின்றது. துறைமுக அதிகார சபையின் கீழ் கிழக்கு முனையத்தை மேம்படுத்தி நடத்திச் செல்ல முடியும் என தொழிற்சங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. இதேவேளை, பாரந்தூக்கிகளைக் கொண்டு வந்த கப்பலுக்கு பெரும் தொகை பணத்தை தாமதக் கட்டணமாக செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது. கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு துறைமுக அதிகார சபைக்கு இடமளிக்காமல் இருப்பது யார்? பெரும் எண்ணிக்கையிலான கப்பல்களை நிறுத்தி பணிகளை முன்னெடுக்கக்கூடிய ஆழமான துறைமுகமான இந்தப் பெறுமதிமிக்க வளத்தை இழக்கச் செய்வதுதான் அவர்களின் நோக்கமா?