கவனயீனமாக செயற்பட்டால் கொரோனா தலைதூக்கும்: ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 24-06-2020 | 8:36 PM
Colombo (News 1st) கவனயீனமாக செயற்பட்டால் இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று தலைதூக்கும் வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். உலகில் சகல நாடுகளும் கொரோனா தொற்று காரணமாக கடுமையாக அவதிப்படும் நிலையில், கூட்டு முயற்சி செயற்பாட்டின் மூலம் இலங்கை சாதகமான வெற்றியைப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார். COVID-19 தெற்று இன்னும் உலகிலிருந்து நீங்கவில்லை என்றும் ஜனாதிபதி தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். கவனயீனமாக செயற்படுவதன் மூலம் மீண்டும் தொற்று பரவும் அபாயம் நிலவுவதால், சுகாதாரப் பிரிவு மற்றும் அரசாங்கத்தின் ஆலோசனைகளின் பிரகாரம் தொடர்ந்தும் பாதுகாப்பான நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அனைத்து இலங்கையர்களிடமும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று 2001 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று மாத்திரம் 40 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 29 பேர் மும்பையிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த இந்திய கடற்படை வீரர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஏனைய 11 பேரும் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள். இதேவேளை, மேலும் 22 கொரோனா நோயாளர்கள் குணமடைந்து நேற்று வீடுகளுக்கு சென்றனர். அதற்கமைய இதுவரை 1562 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர். 428 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதேவேளை, நாளொன்றுக்கு 500 PCR பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய விசேட உயிரியல் ஆய்வகமொன்று முல்லேரியாவில் அமைந்துள்ள கிழக்கு கொழும்பு ஆதார வைத்தியசாலையில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.