by Staff Writer 24-06-2020 | 11:58 AM
Colombo (News 1st) இராஜகிரிய விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா டி நிரஞ்சனா முன்னிலையில் சட்ட மா அதிபர் இன்று (24) தெரிவித்துள்ளார்.
இவ் வழக்குடன் தொடர்புடைய வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடலவிற்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.
இராஜகிரிய விபத்தின் போது 2 இளைஞர்களை காயப்படுத்தியமை, சாரதியை மாற்றியமை, தப்பிச் சென்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு எதிராக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாக, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.
விசாரணை அறிக்கையை மீளாய்வு செய்ததன் பின்னர் வழக்கின் 2 சந்தேகநபர்களுக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திவீப பீரிஸ் மன்றில் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கின் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, சாரதியாக பணியாற்றிய திலும் துஷித குமார மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல ஆகியோர் இன்று மன்றில் ஆஜராகியிருந்தனர்.
இவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம் திகதி மன்றுக்கு அறிவிக்குமாறு முறைப்பாட்டாளர்களுக்கு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.