Colombo (News 1st) கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் வௌியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை செய்ய, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு கிழக்கு மாகாணத்திற்கு சென்று சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
கிழக்கிற்கு சென்றுள்ள குழு பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாகவும், கருணா கருத்து வௌியிட்ட இடத்திலும் தேவையான தகவல்கள் திரட்டப்படவுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.
நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு தேவையான சாட்சியங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணைக் குழு திரட்டியதன் பின்னர், அந்த தகவல்களுக்கு அமைய, கருணா அம்மானிடம் வாக்குமூலம் பதிவு செய்ய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் எனவும் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு, கருணா அம்மானிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்திருந்தது.
எனினும், சுகயீனம் காரணமாக வாக்குமூலம் வழங்க சமூகமளிக்க முடியாது என கருணா அம்மான் நேற்று (23) அறிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை, கருணா அம்மானின் கருத்து தொடர்பில் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்களும் அரசியல் பிரதிநிதிகளும் பொலிஸ் தலைமையகத்திலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலும் இன்று முறைப்பாடு செய்தனர்.
கருணா அம்மானின் கருத்தைக் கண்டித்து நாட்டின் சில பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கலந்துகொண்டிருந்தார்.
கண்டியில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
மகா சங்கத்தினரும் கருணா அம்மானின் கருத்திற்கு பதிலளித்தனர்.
இந்த நாட்டில் நீதி, நியாயம் நிறைவேற்றப்படுகின்றது என்பதை எமக்கு காண்பிக்க வேண்டும். ஒருவருக்காக அதனை அடிபணிய செய்ய முடியாது. அவர் தவறு இழைத்திருந்தால், குற்றப்பத்திரம் தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அனைவருக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அதனை இந்த அரசாங்கத்திடம் நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்காகவே இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தோம்
என எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டார்.