வாக்களிப்பு நிலைய பாதுகாப்பு தொடர்பில் அறிவித்தல்

வாக்களிப்பு நிலையங்கள் சிலவற்றின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை

by Staff Writer 23-06-2020 | 11:46 AM
Colombo (News 1st) இம்முறை பொதுத் தேர்தலில் அடையாளம் காணப்பட்ட சில வாக்களிப்பு நிலையங்களில் மேலதிகமாக பொலிஸ் அதிகாரிகளை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏனைய தேர்தல்களின் போது, கடமைகளில் ஈடுபடுத்தப்படும் 2 பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக ஒருவரை ஈடுபடுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும் பகுதிகளுக்கு அருகிலும் தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியை போன்று நடமாடும் பாதுகாப்பு சேவையை அதிகரிக்கவுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிப்பதாக தேர்தலுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். ஆலோசனைகளை மீறும் வேட்பாளர்கள் அல்லது கட்சிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தலுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் கூறியுள்ளார்.