முறைப்பாட்டிற்கான பிரதிகள் கிடைக்கவில்லை

முறைப்பாட்டிற்கான பிரதிகள் கிடைக்கவில்லை: அனுரகுமார, ராஜித, ரணதுங்க ஆகியோர் ஆணைக்குழுவிலிருந்து வௌியேறினர்

by Staff Writer 23-06-2020 | 4:10 PM
Colombo (News 1st) மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வௌியேறியுள்ளனர். முறைப்பாட்டிற்கான பிரதிகள் கிடைக்காமையால் இவர்கள் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளனர். சாட்சியம் வழங்குவதற்காக அனுரகுமார திசாநாயக்க, ராஜித சேனாரத்ன மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முற்பகல் ஆஜராகினர். அவன்ற் கார்ட் நிறுவனத்தை தான்தோன்றித்தனமாக கையகப்படுத்தியதால் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, நிஸங்க சேனாதிபதி முன்வைத்த முறைப்பாட்டிற்கு அமைய, ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இந்த விசாரணைகள் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காகவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அர்ஜூன ரணதுங்க, ராஜித்த சேனாரத்ன மற்றும் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட 17 தரப்பினர் இந்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக அண்மையில் பெயரிடப்பட்டனர். அவர்களுள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் மேலதிக சொலிஸிடர் ​ஜெனரல் வசந்த நவரத்ன பண்டார ஆகியோரும் அடங்குகின்றனர்.