முஹுது மகா விகாரைக்கான காணி அளவீடு இடைநிறுத்தம்

பொத்துவில் முஹுது மகா விகாரைக்கான காணி அளவீட்டுப் பணிகள் இடைநிறுத்தம்

by Staff Writer 23-06-2020 | 6:08 PM
Colombo (News 1st) அம்பாறை - பொத்துவில், முஹுது மகா விகாரைக்கான காணி அளவீட்டுப் பணிகளை பொதுத் தேர்தல் நிறைவடையும் வரை இடைநிறுத்துமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, பொத்துவில் முஹுது மகா விகாரைக்கான காணி அளவீட்டிற்கான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு பொத்துவில் நீதவான் M.H. முஹம்மட் ராபி நேற்று (22) உத்தரவு பிறப்பித்திருந்தார். காணி அளவீட்டு அறிக்கை, நில அளவை திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மன்றுக்கு அறிவித்ததிற்கமைய, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள குடியிருப்பாளர்கள் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் , சட்டத்தரணிகளான ஆரிப் சம்சுதீன், முஹம்மட் காதிர் ஆகியோர் நேற்று மன்றில் ஆஜராகியிருந்தனர். முஹுது மகா விகாரைக்கு 30 ஏக்கர் காணி மாத்திரமே வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் அத்துமீறி எவரும் வசிக்கவில்லை எனவும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் மன்றுக்கு அறிவித்துள்ளனர். தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் இந்த கூற்றினை ஏற்றுக்கொண்ட நிலையில், காணி அளவீட்டிற்கான அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு பொத்துவில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில், சட்டப்பூர்வமாகவே 13 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அங்கு வசிப்பதாக பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். எனினும், சட்டவிரோதக் குடியிருப்பாளர்கள் என அறிவித்து அந்த பகுதியில் கட்டட நிர்மானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இருதரப்பு வாதங்களை ஆராய்ந்த பொத்துவில் நீதவான், நில அளவை திணைக்கள அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட தீர்மானம் குறித்து அறிவிப்பதாக உத்தரவிட்டுள்ளார்.