நிஸங்க ஆணைக்குழுவில் முறையிட சட்டத்தில் இடமில்லை

நிஸங்க சேனாதிபதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய சட்டத்தில் இடமில்லை: சட்ட மா அதிபர்

by Staff Writer 23-06-2020 | 8:34 PM
Colombo (News 1st) அவன்ற் கார்ட் தலைவர் நிஸங்க சேனாதிபதிக்கு அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார். அரச அதிகாரிகள், அரச கூட்டுத்தாபனங்களின் ஊழியர்கள், முப்படை உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அரசியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்வதற்காகவே 'அரசியல் துன்புறுத்தல் தொடர்பான சம்பவங்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு" நியமிக்கப்பட்டது என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா சுட்டிக்காட்டியுள்ளார். நிஸங்க சேனாதிபதி மேற்படி எந்தவொரு பிரிவிற்கும் உட்படாதவர் என சட்ட மா அதிபர் கூறியுள்ளார். அவர் தொடர்பாக ஆரம்பத்தில் பாரதூரமான ஊழல் மோசடிகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணை நடத்தப்பட்டதாகவும், இதன்​போது நிஸங்க சேனாதிபதியும் அவரது நிறுவனமும் ரக்னா லங்கா நிறுவனமும் பொய் புரட்டுகளுடன் மேற்கொண்ட தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார். அதனைத் தவிர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆகவே, நிஸங்க சேனாதிபதியின் முறைப்பாடு அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளுடன் தாக்கல் செய்யப்பட்ட ஒன்று எனவும், அது அவருக்கு எதிராக விசாரணை நடத்தும் அதிகாரிகளை அச்சுறுத்தவும், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட ஒன்று எனவும் சட்ட மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். விசாரணை ஆணைக்குழு என்பது தகவல்களை சேகரிக்கும் ஒன்றே தவிர, அது நீதிமன்றமல்ல என ஆணைக்குழுவிற்கு சட்ட மா அதிபர் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டுப் பிரிவிற்கு எதிராக சட்ட மா அதிபர் நீதிமன்றில் கொண்டு வந்துள்ள வழிமுறைகளை வினவவோ, விசாரணை நடத்தவோ ஆணைக்குழு முற்படுகின்றமை நீதிமன்ற செயற்பாட்டில் தலையீடு செய்வதாகவே அமையும் என சட்ட மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். முறைப்பாட்டாளர் தரப்பிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிக்கு அழைப்பாணை அல்லது கட்டளை அனுப்பும் வகையில் முறைப்பாட்டுப் பிரிவினர் ஆணைக்குழுவை தவறான வழிக்கு இட்டுச்சென்றுள்ளதாக சட்ட மா அதிபர் கூறியுள்ளார். இதேவேளை, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆணைக்குழுவில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரோஹான்ன அபேசூரியவிற்கு, ஆணைக்குழுவின் உபாலி அபேரத்ன இன்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்ட மா அதிபர் முன்வைத்த கடிதம் தொடர்பாக ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை வினவியபோதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு இரட்டைவேடம் போட முடியாது என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தெரிவித்துள்ளார். ஆணைக்குழு சார்பாக சட்ட மா அதிபர் திணைக்களம் முன்னிலையாக வேண்டும் என்பதே ஆணைக்குழு தலைவரது நிலைப்பாடாகும்.