கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தில் பாரந்தூக்கியை பொருத்த இடமளிக்காத அதிகாரி யார்?

by Staff Writer 23-06-2020 | 9:07 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுக கிழக்கு முனையின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை இலங்கை துறைமுக அதிகார சபை ஊடாக மேற்கொள்வதற்கு எதிராக மறைமுக செயற்பாடொன்று இடம்பெறுவதாக துறைமுக தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பாரந்தூக்கி மற்றும் ஆரம்பகட்ட நிர்மாணப் பணிகளை துறைமுக அதிகார சபை தற்போதைக்கு பூர்த்தி செய்துள்ளது. அரச வங்கியொன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட 80 மில்லியன் டொலர் செலவில் இந்தப் பணிகள் பூர்த்தியாகியுள்ளன. எனினும், கிழக்கு முனையில் ஜப்பான், இந்தியா மற்றும் இலங்கை ஒன்றிணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றே கடந்த அரசாங்கத்தின் காலத்தில் திட்டமிடப்பட்டது. ஆனாலும், அமைச்சர் மஹிந்த சமரசிங்க அமைச்சரவையில் முன்வைத்த திட்டமொன்றில் முனையத்திற்குத் தேவையான பாரந்தூக்கி உள்ளிட்ட அடிப்படை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்புலத்தில் மூன்று பாரந்தூக்கிகளை ஏந்தியவாறு கப்பலொன்று கடந்த சனிக்கிழமை கொழும்பை வந்தடைந்துள்ளது. இந்த பாரந்தூக்கிகளின் மொத்த பெறுமதி 25 .7 மில்லியன் டொலர்களாகும். இந்த மூன்று பாரந்தூக்கிகளையும் கிழக்கு முனையத்தில் பொருத்துவது தொடர்பாக பிரச்சினைக்குரிய சூழல் உருவாகியுள்ளது. பாரந்தூக்கிகளை இறக்குவது திடீர் மறைமுக செயற்பாடு காரணமாக தடைப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய துறைமுக - வணிகத் தொழில் மற்றும் சேவைகள் ஊழியர் சங்கம், ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்கங்கள் துறைமுகத்தினுள்ளே இன்றும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாடுகளுக்கு வழங்காமல் துறைமுக அதிகார சபை ஊடாக முன்னெடுக்க அரசாங்கமும், துறைமுக அதிகார சபையும் தீர்மானித்துள்ள நிலையில், அதற்கு எதிராக முளைத்துள்ள திடீர் மறைமுக சக்தி எது? இந்த நிலைமை தொடர்பில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தொழிற்சங்கங்கள் சில இன்று பிற்பகல் குருணாகலுக்கு சென்றுள்ளன. இது தொடர்பாக நாளை பதிலளிக்க முடியும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்