சுயநலவாதிகள் கையில் சிக்குண்டுள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியினர்: வீ.ஆனந்தசங்கரி கடிதம்

சுயநலவாதிகள் கையில் சிக்குண்டுள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியினர்: வீ.ஆனந்தசங்கரி கடிதம்

சுயநலவாதிகள் கையில் சிக்குண்டுள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியினர்: வீ.ஆனந்தசங்கரி கடிதம்

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2020 | 6:59 pm

Colombo (News 1st) ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக அண்மையில் யாழ்ப்பாணத்தில் வௌியிட்ட கருத்து தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி பகிரங்கக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

முன்னாள் போராளிகள் என்பதிலிருந்து சற்றுத் தடம் புரண்டு, புனிதமான அரசியலை வியாபாரமாக செய்யும் சுயநலவாதிகள் கையில் சிக்கிக்கொண்ட இந்நாள் அரசியல்வாதியாக ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் மாறிவிட்டதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதி யுத்த நேரத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டிலும் இந்தியாவிலும் சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு, வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக தமிழர் விடுதலைக் கூட்டணி விடுத்துள்ள பகிரங்க கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்த பின்னரான தேர்தலில் போட்டியிட விரும்பிய முன்னாள் போராளிகள் அமைப்பினரை, இராணுவத்தினரின் உளவாளிகள் எனக் கூட்டமைப்பினரே தட்டிக்கழித்ததாகவும் வீ.ஆனந்தசங்கரியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது எந்த வகையில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை ஏற்றுக்கொண்டுள்ளனர் எனவும் அந்தக் கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் ஒரு குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரை, முன்னாள் போராளிகள் கொலை செய்ய முயற்சித்தார்கள் என குற்றஞ்சாட்டி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் வீ.ஆனந்தசங்கரி நினைவுபடுத்தியுள்ளார்.

உண்மையில் கொலை முயற்சி நடைபெற்றதா அல்லது குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தனது பாதுகாப்பை அதிகரித்துக் கொள்வதற்காக செய்த ஏற்பாடா இதுவென கேட்குமாறும் ஜனநாயகப் போராளிகள் கட்சியினரிடம் கடிதத்தின் வாயிலாக வீ.ஆனந்தசங்கரி வினவியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புனர்வாழ்வளிக்கப்பட்ட 12,000 பேரில் , எத்தனை பேருக்கு நிரந்தர வாழ்வாதாரம் பெற்றுக்கொடுத்துள்ளார்கள் எனவும், தமிழ் அரசியல் கைதிகள் எத்தனை பேர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும், வடக்கு, கிழக்கிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்,தமது குடும்பத்தினர் சகிதம் வசதியாக வாழ்வதற்கு , காணிகளை வாங்கி அடுக்குமாடி வீடுகளைக் கட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்