வௌிநாட்டு கண்காணிப்பாளர்கள் இம்முறை வருவார்களா?

தேர்தலுக்காக வௌிநாட்டு கண்காணிப்பாளர்கள் இம்முறை வருவார்களா?

by Fazlullah Mubarak 22-06-2020 | 9:06 AM

பொதுத் தேர்தலை முன்னிட்டு வௌிநாட்டு கண்காணிப்பாளர்கள் வருகை தருவார்களா என்பது தொடர்பில் எதிர்வரும் 2 வாரங்களின் பின்னரே தீர்மானிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் சட்டதிட்டங்களை பாதுகாப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கண்டி மாவட்ட அரச அதிகாரிகளை தௌிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை கூறியுள்ளார். பொதுத் தேர்தல் நடாத்தப்படும் எனவும், அச்சமின்றி வருகை தந்து தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். தேர்தல் சட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு போதிய விளக்கம் இல்லை எனவும் மஹிந்த தேசப்பிரிய இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். சட்டவிரோதமாக பதாகைகளை காட்சிப்படுத்துவது, மக்களுக்கு உணவு மற்றும் பொருட்களை விநியோகிப்பது போன்ற நடவடிக்கைகளை பலர் முன்னெடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் குறித்து பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.