சர்ச்சையான கருத்து தொடர்பில் கருணா மீது விசாரணை

சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் கருணா மீது விசாரணை

by Fazlullah Mubarak 22-06-2020 | 11:04 AM

கருணா அம்மான் தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் கருணா அம்மான் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் அண்மையில் அவர் வௌியிட்ட கருத்து குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன கூறியுள்ளார் அம்பாறை நாவிதன்வௌி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வௌிவந்துள்ளது. இராணுவத்தினரில் குறிப்பிட்ட எண்ணிக்கையினரை தான் புலிகள் அமைப்பில் இருக்கும் போது கொலை செய்திருந்ததாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் அரசியல் அரங்கில் ஒலித்தன. அதனைத் தொடர்ந்து பதில் பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.