சிறையிலிருந்து போதைப்பொருள் கடத்தல் முன்னெடுப்பு 

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து போதைப்பொருள் கடத்தல்; மூவர் கைது 

by Staff Writer 21-06-2020 | 10:48 AM
Colombo (News 1st) நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து வழிநடத்தப்படும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண புலனாய்வுப்பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய, கட்டுநாயக்க விமானப்படை முகாமில் சேவையாற்றும் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 100 கிராம் ஹெரோயின் மற்றும் 400 கிராம் கேரள கஞ்சா ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக மேல் மாகாண புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் ஊடாக, நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் கைதியின் வீட்டிலிருந்து 1 ஒரு கிலோ 830 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைதியின் மனைவியும் அவரின் சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஆணிடமிருந்து 455 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதியால் மேற்கொள்ளப்படும் தொலைபேசி அழைப்புகளுக்கு அமைய, பல்வேறு தரப்பினருக்கும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகவும் அதன்மூலம் கிடைக்கும் பணத்தை கைதியின் மனைவியின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்படுவதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேகநபர் சீதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இன்று (21) நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். ஏனைய இருவரும் மினுவங்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சீதுவ மற்றும் மினுவங்கொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.