MCC-இல் கையொப்பமிட்ட நேபாளத்தின் நிலை என்ன?

by Bella Dalima 20-06-2020 | 7:52 PM
Colombo (News 1st) அமெரிக்காவுடன் MCC ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவது தொடர்பாக நாட்டில் கடும் எதிர்ப்பலைகள் தோன்றியுள்ளன. இலங்கை MCC உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. எனினும், நேபாளம் 2017 ஆம் ஆண்டு MCC ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டாலும் பாராளுமன்றம் அதனை அனுமதிக்கக்கூடாது என அதற்கு எதிராகப் போராடி வரும் நேபாள மக்கள் வலியுறுத்துகின்றனர். பாராளுமன்றம் அதனை அனுமதித்தால் நாட்டின் தேசிய தேவைகள் மற்றும் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் என நேபாள மக்கள் கூறுகின்றனர். நேபாளத்தில் மின்சக்தி பிரிவினை வலுப்படுத்தல், வலயத் தொடர்புகளை மேம்படுத்தல், போக்குவரத்துச் செலவுகளை நிர்வகித்தல் மற்றும் தனியார் முதலீடுகளையும் வேலைவாய்ப்பையும் ஊக்குவித்தல் போன்ற எதிர்பார்ப்புகளுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்தில் நேபாள அரசாங்கம் கையொப்பமிட்டுள்ளது. MCC நிறுவனம் தெற்காசியாவில் முதலாவதாக நேபாளத்துடனேயே ஒப்பந்தமிட்டது. 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி அப்போதைய நேபாள நிதியமைச்சரும் அமெரிக்க தூதுவரும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இலங்கைக்கான தற்போதைய அமெரிக்கத் தூதுவர் Alaina B. Teplitz, அன்று நேபாளத்திற்கான தூதுவராக இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் இருந்தார். இந்த ஒப்பந்தத்தில் கைச்சாதிடுவது தொடர்பாக நேபாளத்தின் ஆட்சியிலிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கிடையில் பிரிவு ஏற்பட்டிருந்தது. தற்போது அதற்கு மக்களின் எதிர்ப்பும் எழுந்துள்ளது. அமெரிக்காவின் மறைக்கப்பட்ட சூழ்ச்சி அதிகாரத்தை நேபாளத்தின் மீது சுமத்த முயற்சிப்பதாக ஆட்சியிலிருக்கும் கட்சியின் எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர். MCC ஒப்பந்தத்தை அனுமதிப்பது தொடர்பாக கலந்தாலோசிப்பதற்கு நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இன்று கூட்டம் நடத்தவுள்ளது. இந்நிலையில், MCC ஒப்பந்தம் நாட்டிற்கு பாதகமானது என நியூஸ்ஃபெஸ்ட் வௌிக்கொணர்ந்ததையடுத்து, அரச மற்றும் எதிர்த்தரப்பு பிரதிநிதிகள் இது தொடர்பில் குரல் எழுப்புகின்றனர். எதிர்ப்பு நீடிக்கும் நிலையில், பொதுத் தேர்தலின் பின்னர் MCC ஒப்பந்தம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அண்மையில் பத்திரிகைகளுக்கு தெரிவித்திருந்தார். போக்குவரத்து கட்டமைப்பினை மேம்படுத்துவது மற்றும் காணியுரிமைச் சட்டத்தினை மறுசீரமைப்பதற்காக 480 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அமெரிக்காவின் Millennium Challenge Corporation எனப்படும் MCC நிறுவனத்துடன் ஒப்பந்தமிட கடந்த அரசாங்கத்தின் காலத்தில் யோசனை முன்வைக்கப்பட்டது. ACSA ஒப்பந்தத்தில் இலங்கை ஏற்கனவே கையொப்பமிட்டுள்ளதுடன், அது கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மேலும் விரிவாக்கப்பட்டது. ACSA ஒப்பந்தம் மாத்திரம் கையொப்பமிடப்பட்டுள்ள நிலையில், கடந்த காலத்தில் பிரச்சினைக்குரிய செயற்பாடுகள் பல பதிவாகின. இதேவேளை, சமீபத்தில் அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் PCR பரிசோதனையைப் புறக்கணித்து நாட்டிற்குள் பிரவேசித்தமை தொடர்பாக கடும் சந்தேககங்கள் எழுந்திருந்தன. இராஜதந்திர கடவுச்சீட்டுடைய அவர் இந்து பசுபிக் அமைப்பின் அதிகாரி என பின்னர் அரசாங்கத்தரப்பினர் உறுதிப்படுத்தினர்.