கருணா அம்மானை சிறைக்கு அனுப்ப வேண்டும்: ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் வலியுறுத்தல்

by Bella Dalima 20-06-2020 | 9:16 PM
Colombo (News 1st) தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரனின் கருத்து தொடர்பில் தற்போது பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை ளெியிட்டு வருகின்றனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் இடையே நேற்று (19) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் தொடர்பில் வினவியபோது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் விநாயகமூர்த்தி முரளிதரன் போட்டியிடவில்லை எனவும் அவர் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தால், தமது கட்சிக்கு ஆதரவு அளிப்பார் எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் திலும் அமுணுகம குறிப்பிட்டார். இந்நிலையில், யுத்த குற்றவாளியான விநாயகமூர்த்தி முரளிதரன் தேசியப் பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்க மஹிந்த ராஜபக்ஸ இரண்டு தடவைகள் சந்தர்ப்பமளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.
அரந்தலா தேரர் கொலைக்கு கட்டளையிட்டவராகக் கருணா அம்மான் குறிப்பிடப்படுகின்றார். தலாத மாளிகைக்கு மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டும் கருணா அம்மானுக்குள்ளது. ஶ்ரீ மகா போதிக்கு அருகில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலிலும் கருணா அம்மானின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்த குற்றங்களுடன் தொடர்புடைய இவ்வாறான ஒருவரையே, கடந்த பல வருடங்களாக தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கி, மஹிந்த ராஜபக்ஸ பாதுகாத்துள்ளார்
என நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க சுட்டிக்காட்டினார்.
சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக ஒரு புறம் விடுதலைப் புலிகளைக் கொலை செய்தமை தொடர்பிலும், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இராணுவத்தினரைக் கொலை செய்தமை தொடர்பிலும் பேசுகின்றனர். ராஜபக்ஸ முகாமிலுள்ளவர்கள் போலியான தேசபக்தி கொண்டவர்கள் என்பதையும், அனைத்தையும் அதிகாரத்தின் ஊடாக ஒடுக்க முடியும் என்பதனையும் அதிகாரத்திற்காக எவரையும் இணைத்துக்கொள்ள முடியும் என்பதனையும் இதன் ஊடாக வௌிகொணர்ந்துள்ளனர். அதனால் அவர்கள் தேசப்பற்றை விடவும் அதிகாரப் பேராசை கொண்ட குழுவினர் என்பது நிரூபணமாகியுள்ளது
என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மூவாயிரம் இராணுவ வீரர்களைக் கொலை செய்ததாக விநாயகமூர்த்தி முரளிதரன் ஏற்றுக்கொள்வதால், பாராளுமன்ற உறுப்புரிமை வழங்காது, உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்தி அவரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் நலீன் பண்டார ஜயமஹ வலியுறுத்தினார்.