சிறைச்சாலை அதிகாரிகளுக்கு சட்ட மா அதிபர் விடுத்துள்ள எச்சரிக்கை

by Staff Writer 19-06-2020 | 8:28 PM
Colombo (News 1st) சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் குற்றச்செயல்களை ஒழிப்பதற்கு சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்தார். சிறைச்சாலை அதிகாரிகளை இன்று சந்தித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டார். கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு சென்ற சட்ட மா அதிபர், சிறைச்சாலை வளாக மற்றும் பயிற்சி மத்திய நிலைய அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்றினார். இதன்போது, நேர்மையான அதிகாரிகளைத் தேட வேண்டியிருப்பதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா குறிப்பிட்டார். குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான பயிற்சிக் கல்லூரியாக சிறைச்சாலை காணப்படுவதாகவும் கைதிகளிடமும் அதிகாரிகளிடமும் ஒழுக்கம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். இலஞ்சத்திற்கும் ஊழலுக்கும் அதிகாரிகள் அடிமையாகியுள்ளதாகக் கூறிய அவர், கைதிகள் குற்றங்களுக்கு அடிமையாகியுள்ளதாகத் தெரிவித்தார். முக்கிய குற்றங்கள் சிறைச்சாலைக்குள்ளேயே திட்டமிடப்படுவதாகவும் நாட்டின் சட்டத்திற்கும் அமைதிக்கும் இது அச்சுறுத்தலானது எனவும் அவர் கூறினார்.
சட்டம், அமைதி இல்லாவிட்டால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. தயவுசெய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பயப்பட வேண்டாம். சட்டத்தை மீறுவோருக்கு எதிராக ஒரு செய்தியை விடுக்கவே நான் இங்கு வந்தேன். அதிகாரிகளோ கைதிகளோ யாராக இருந்தாலும் எனக்குப் பிரச்சினை இல்லை. நான் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவேன்
என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா எச்சரிக்கை விடுத்தார். சிறைச்சாலைக் கட்டமைப்பில் இடம்பெற வேண்டிய சில மாற்றங்கள் தொடர்பிலும் சட்ட மா அதிபர் இதன்போது சுட்டிக்காட்டினார். அதிகாரிகள் சிலருக்கு மாற்றம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும் எனவும் அனைத்து சிறைச்சாலைகளிலும் CCTV கமராக்களை பொருத்த வேண்டும் எனவும் சட்ட மா அதிபர் வலியுறுத்தினார்.