ஆட்ட நிர்ணயம்: மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சு அறிவிப்பு

by Staff Writer 19-06-2020 | 9:02 PM
Colombo (News 1st) 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நியூஸ்லைன் தொகுப்பிற்கு நேற்று (18) தெரிவித்த கருத்து தற்போது பெரும் புரளியைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சரான டலஸ் அழகப்பெரும இன்று அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார். மஹிந்தானந்த அளுத்கமகேவின் இந்தக் கருத்து தொடர்பாக விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரான ருவன் சந்திரவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் இன்று ஆலோசனை வழங்கினார். அதன் பிரகாரம், விளையாட்டுத்துறையில் இடம்பெறும் குற்றங்களைத் தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவில் விளையாட்டுத்துறை செயலாளர் இன்று முறைப்பாடு செய்தார். 2019 - 24 ஆம் இலக்க விளையாட்டுத்துறை சட்டம் தொடர்பான குற்றங்களை தடுக்கும் விதிமுறைகளின் கீழ் உடனடி விசாரணை நடத்தி சட்ட ரீதியாக செயற்படுமாறு அந்த முறைப்பாட்டின் ஊடாகக் கோரப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பாக 2 வாரங்களுக்கு ஒரு தடவை அறிக்கை சமர்ப்பிக்கும்படி விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி 2011 ஏப்ரல் 2 ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை அணி இறுதிப் போட்டியில் நான்கு மாற்றங்களுடன் களமிறங்கியது. அதுவரை போட்டிகளில் பங்கேற்றிருந்த சாமர சில்வா, ரங்கன ஹேரத், அஜந்த மென்டிஸ் மற்றும் அஞ்சலோ மெத்யூஸ் ஆகியோருக்கு பதிலாக இறுதிப் போட்டியில் சாமர கப்புகெதர, திசர பெரேரா, சுராஜ் ரந்திவ், நுவன் குலசேகர ஆகியோரை அப்போதைய தெரிவுக்குழு இணைத்தது. இறுதிப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது. போட்டியில் இரண்டு தடவைகள் நாணய சுழற்சி போடப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக மஹேல ஜயவர்தன ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ஓட்டங்களைப் பெற்றது. வெற்றி இலக்கான 275 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. எனினும், கௌதம் கம்பீர் 97 ஓட்டங்களையும், மஹேந்திர சிங் தோனி ஆட்டமிழக்காமல் 91 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள இந்திய அணி 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது. இந்தக் காலப்பகுதியில் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சராக மஹிந்தானந்த அளுத்கமகே செயற்பட்டார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக D.S.D. சில்வாவும் செயலாளராக நிஷாந்த ரணதுங்கவும் செயற்பட்டனர். உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கான பணிப்பாளராக சுராஜ் ரந்தெனிய பொறுப்பு வகித்தார். இந்த உலகக் கிண்ணத் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக அரவிந்த டி சில்வாவும், அமல் சில்வா, ரஞ்சித் பெர்னாண்டோ, ஷபீர் அஸ்கர் அலி ஆகியோர் தெரிவுக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவும் இருந்தனர்.