குடத்தனை வாகன உரிமையாளர்களுக்கு வழமைபோன்று மணல் விநியோகத்தில் ஈடுபட அனுமதி

குடத்தனை வாகன உரிமையாளர்களுக்கு வழமைபோன்று மணல் விநியோகத்தில் ஈடுபட அனுமதி

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2020 | 8:41 pm

Colombo (News 1st) வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதி வாகன உரிமையாளர்கள் மேற்கொண்ட போராட்டம் இன்று சுமூகமாக முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது.

இன்று முதல் மணல் விநியோகம் வழமைபோன்று இடம்பெறும் எனவும், குடத்தனை வாகன உரிமையாளர்களுக்கு முன்னர் போன்று அனுமதி அளிக்கப்படுவதாகவும் வழங்கப்பட்ட உறுதிப்பாட்டை அடுத்தே இந்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் மணல் விநியோகத்திற்கு தம்மை இணைத்துக்கொள்ளவில்லை எனத் தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் போராட்டம் நடத்தினர்.

எனினும், அப்பகுதிக்கு வருகை தந்திருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கொடுத்த வாக்குறுதியை அடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தமது கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி குடத்தனை பகுதி வாகன உரிமையாளர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்டவர்கள் போராட்டம் நடந்த இடத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

இதனை அறிந்த பருத்தித்துறை பொலிஸார் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு சென்றதுடன் மணற்காடு கிராம அபிவிருத்தி சங்கத்துடன் கலந்துரையாடினர்.

இதன்போது, வழமைபோன்று மணல் விநியோகத்தில் ஈடுபடுவதற்கு குடத்தனை பகுதி வாகன உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்