பஸ் கொள்வனவிற்காக இலகு வட்டி கடன்

பஸ் கொள்வனவிற்காக இலகு வட்டி கடன்

by Staff Writer 18-06-2020 | 1:17 PM
Colombo (News 1st) தனியார் பஸ் துறையை கட்டியெழுப்புவதற்காக பஸ்களை கொள்வனவு செய்ய 4 வீத இலகு வட்டிக்கு கடன் பெற்றுக் கொடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தாழ்வான அடிப்பகுதியை கொண்ட பஸ்களை கொள்வனவு செய்வதற்கு மாத்திரமே இந்த இலகு கடன் வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். லொறி அடிச்சட்டங்களில் வடிவமைக்கப்படும் பஸ்களுக்கு இதன் பின்னர் அனுமதி வழங்கப்படாது எனவும் பயணிகள் போக்குவரத்துக்கென முறையாக வடிவமைக்கப்பட்ட பஸ்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இந்த விடயங்கள் தொடர்பில் தௌிவுபடுத்தியுள்ளார். பஸ்களுக்கான இரண்டாவது முந்துரிமை வீதி ஒழுங்கை, பொரளையிலிருந்து கோட்டை வரை எதிர்வரும் 22 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் கூறியுள்ளார். மொறட்டுவை சிலுவை சந்தியிலிருந்து புறக்கோட்டை வரையான முதலாவது முந்துரிமை ஒழுங்கையுடனான நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சேவையில் ஈடுபடும் பஸ்களின் கால அட்டவணையை பெற்றுக் கொள்வதற்காக, PASSENGERS APP என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.