செயலணியை நிராகரிக்கும் பொது அமைப்புகளின் ஒன்றியம் 

தொல்லியல் மரபுரிமைகளுக்கான ஜனாதிபதி செயலணியை முற்றாக நிராகரிப்பதாக திருகோணமலை பொது அமைப்புகளின் ஒன்றியம் அறிவிப்பு

by Staff Writer 18-06-2020 | 8:08 PM
Colombo (News 1st) கிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணி நியமனம் COVID-19 நெருக்கடி காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்டதன் உள்நோக்கம் தொடர்பில் திருகோணமலை பொது அமைப்புகளின் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த செயலணியில் இடம்பெற்றுள்ள ஒரு சில உறுப்பினர்களின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பிலும் அந்த அமைப்பு அதிருப்தி வௌியிட்டுள்ளது. இத்தகைய செயற்பாடுகள் இலங்கையின் ஒற்றைக் கலாசாரத்தை மாத்திரமே ஊக்குவிக்கும் எனவும் திருகோணமலை பொது அமைப்புகளின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளின் ஆரம்பப் புள்ளியான இணைந்த வடக்கு கிழக்கும் தமிழர்களின் பூர்வீகத் தொன்மையும் மிக முக்கிய அலகுகளாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ் மக்களின் பாரம்பரிய இருப்பை சிதைக்கும் வகையில், பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திருகோணமலை பொது அமைப்புகளின் ஒன்றியம் விசனம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த செயலணியை முற்றாக நிராகரிப்பதாக அறிவித்துள்ள அந்த அமைப்பு, தமிழ் மக்களின் தொன்மையையும் இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும் அரசியல் நிகழ்ச்சி வேலைத்திட்டங்களை வன்மையாகக் கண்டிப்பதாக அறிவித்துள்ளது.